கோலாலம்பூர்: ‘விசிட் மலேசியா 2026’ இயக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் நோக்கத்துடன் குறைந்தபட்சம் 23 மணி நேரம் தங்குவதற்கான திட்டத்தைச் சுற்றுப்பயணிகளுக்கு வழங்குமாறு மலேசியாவின் சுற்றுப்பயண, கலை, கலாசார அமைச்சு ஹோட்டல்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
‘விசிட் மலேசியா 2026’ இயக்கத்துக்கான விளம்பர உத்தியின் ஒரு பகுதி அது என்று அமைச்சு கூறியது.
“குறைந்தபட்சம் 23 மணி நேரம் தங்கும் திட்டத்தை வழங்குமாறு ஹோட்டல் நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உதாரணத்திற்கு, வருகையாளர்கள் பிற்பகல் 2 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்து, மறுநாள் ஒரு மணிக்கு வெளியேறலாம்,” என்று அமைச்சு நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்தது.
“இது, சுற்றுப்பயணிகளின் அனுபவத்தையும் மேம்படுத்தும். இதன்மூலம், மலேசியாவின் விருந்தோம்பல் துறை அனைத்துலக நிலையில் மேலும் போட்டித்தன்மைமிக்கதாக அமையும்,” என்று அது குறிப்பிட்டது.
இருப்பினும், ஹோட்டலுக்குள் நுழையும், வெளியேறும் நேரங்களை உறுதிசெய்வது ஹோட்டல் நிறுவனங்களின் வர்த்தக முடிவ என்று அமைச்சு தெரிவித்தது.
“எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர், எப்போதும் தங்கும்விடுதியின் நிபந்தனைகளைப் புரிந்துகொண்டு ஆராயுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
“சுற்றுப்பயணத் துறை போட்டித்தன்மைமிக்க துறை. பயனீட்டாளர்களுக்குத் தெரிவுசெய்யும் உரிமை உண்டு,” என்று அமைச்சு கூறியது.

