ரியாத்: மத்தியக் கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் தடைசெய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே ஹூதிப் படையின் ஆளில்லா விமானம் ஒன்றைத் தனது வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியிருப்பதாகச் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) மாலையில் அந்த ஆளில்லா வானூர்தி தகர்க்கப்பட்டது.
இது மெக்காவை குறிவைத்து ஹூதிப் படை நடத்திய இரண்டாவது தாக்குதல் முயற்சி என்று ஏமனில் உள்ள சவூதி கூட்டணிப் படையின் செய்தித்தொடர்பாளர் துர்க்கி அல்-மால்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மெக்காவைக் குறிவைத்து ஹூதிப் படைகள் ஏவுகணை பாய்ச்சியதாக அவர் கூறினார்.
தற்போது சவூதி அரேபியா மெக்கா நகருக்குப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஆனால், மெக்கா நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று ஹூதிப் படையின் அரசியல் பிரிவு உறுப்பினரான முகம்மது அல்-ஃபரா தெரிவித்துள்ளார். மெக்காவை இலக்கு வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று அவர் சாடியுள்ளார்.
ஆறு மாதங்களாகத் தொடரும் அமெரிக்க-ஈரான் போரினால் ஏற்கெனவே உலகளாவிய எரிசக்திச் சந்தை நிலைகுலைந்துள்ள சூழலில், சவூதி அரேபியா மீதான இந்தத் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இப்போரின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே, சவூதி அரேபியப் பாலைவனத்தைக் கடந்து செல்லும் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான கிழக்கு-மேற்கு குழாய் இணைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அக்குழாய் செயலிழந்தது.
ஈராக்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈரான் ஆதரவில் செயல்படும் வேறோர் இயக்கமே அத்தாக்குதலுக்குக் காரணம் எனச் சவூதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
