வாஷிங்டன்: அமெரிக்காவில் மிக முக்கிய இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எண்ணெய் விலையை உயர்த்தும் நோக்கில் ஹூதிப் படை செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சவூதி அரேபியா மீதான ஹூதிப் படையின் தாக்குதல்களைத் தாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கில் பரவியுள்ள போருக்கு மத்தியில், சவூதி தலைமையிலான படைகளுக்கும் ஹூதிப் படைகளுக்கும் இடையிலான ஏமன் உள்நாட்டுப் போர் கடந்த ஜூலை மாதம் மீண்டும் தீவிரமடைந்தது.
இது உலகளாவிய எரிசக்திச் சந்தையை உலுக்கியுள்ளதுடன், மத்திய கிழக்கில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்க் கப்பல்கள், போக்குவரத்து மையங்களைக் குறிவைத்து ஹூதிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரயிறுதியில் ரியாத் அனைத்துலக விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலும் இதில் அடங்கும்.
ரியாத் விமான நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹூதிப் படைக்கு எதிராகச் சவூதி அரேபியா மேற்கொள்ளும் வான்வழித் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணையக்கூடும் என அதிபர் டிரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
