கெய்ரோ: இஸ்ரேலைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ஏமனின் ஹூதிப் படை தெரிவித்தது.
ஈரானுடன் ஒருங்கிணைந்து இத்தாக்குதலை நடத்தியதாக அது கூறியது.
ஈரானுடன் இணைந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக ஈரானின் ஆதரவுடன் செயல்படும் அமைப்பு ஒன்று கூறுவது இதுவே முதல்முறை.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் ஜாஃபா பகுதி மீது ஹூதிப் படை பல ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக அதன் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா தெரிவித்தார்.
“இஸ்ரேலால் பாலஸ்தீன, ஈரானிய மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிய ராணுவத்துடன் ஒருங்கிணைந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஈரான், ஏமனிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதும் இஸ்ரேலில் உள்ள பல பகுதிகளில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் கூறியது.
ஈரான் மீது இஸ்ரேல் ஜூன் 13ஆம் தேதியன்று ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
அதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனைத் தொடர்ந்து, ஏமனிலிருந்து இஸ்ரேலை நோக்கிய ஹூதிப் படை பல ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
அவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் சுட்டு வீழ்த்திவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இஸ்ரேலை நோக்கி ஈரான் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மேலும் பல ஏவுகணைகளைப் பாய்ச்சியது.
இதில் குறைந்தது பத்து பேர் மாண்டதாக இஸ்ரேலிய அவசரகாலச் சேவை கூறியது.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் பாய்ச்சிய ஏவுகணை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கைத் தகர்த்தது.
தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் மிகக் கடுமையான பின்விளைவுகளை அது சந்திக்க வேண்டி வரும் என்று ஈரானிய அதிபர் மசூது பெரேஷ்கியான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆக அண்மைய இஸ்ரேலிய தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையஇலான சண்டைக்கு எளிதில் தீர்வு காணலாம் என்றார் அவர்.