தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2026ல் தங்க விலை அவுன்சுக்கு US$5,000 தொடும் என எச்எஸ்பிசி கணிப்பு

2 mins read
e5007b19-bcb4-4dec-8981-e2b096a8e7c6
ஜெர்மனியில் உள்ள ஒரு வணிகத்தில் தங்கக் கட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. - படம்: இபிஏ

2026ல் தங்க விலை ஒரு அவுன்சுக்கு US$5,000 வரை உயரக்கூடும் என எச்எஸ்பிசி வங்கி கணித்துள்ளது. இடர்கள் அதிகரிப்பதும் சந்தையில் தங்கம் வாங்குவோரின் தாக்கமும் இதற்குக் காரணம் என வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அது கூறியது.

உடனடித் தங்கத்தின் (ஸ்பாட் கோல்ட்) விலை வியாழக்கிழமை US$4,300 என்ற அளவைத் தாண்டி, டிசம்பர் 2008க்குப் பிறகு முதன்முறையாக அதன் வலுவான நிலையை நோக்கி நகர்ந்தது.

புவிசார் அரசியல் பதட்டங்கள், மத்திய வங்கிகளின் வலுவான தங்கக் கொள்முதல், பரிவர்த்தனை வர்த்தக நிதி வரத்து அதிகரிப்பு, அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு மீதான எதிர்பார்ப்பு, வரி தொடர்பான பொருளியல் நிச்சயமற்ற சூழல் போன்ற அம்சங்கள் தங்க விலை உயர்வுக்குக் காரணம்.

“2026 முற்பாதியில் விலை தங்க மேலும் உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளது, 2026 முற்பாதியில் தங்க விலை அவுன்சுக்கு US$5,000 என்ற உச்சம் தொடக்கூடும்,” என்று எச்எஸ்பிசி அதன் ஆய்வுக் குறிப்பில் தெரிவித்தது.

இதற்கிடையே, 2025க்கான தனது சராசரி தங்க விலை முன்னுரைப்பை முன்பிருந்த US$3,355லிருந்து US$3,455ஆக எச்எஸ்பிசி உயர்த்தியுள்ளது. 2026க்கான சராசரி தங்க விலை முன்னுரைப்பை முன்பிருந்த US$3,950லிருந்து US$4,600ஆகவும் அது உயர்த்தியுள்ளது.

புவிசார் அரசியல் இடர்கள், பொருளியல் கொள்கை நிச்சயமற்றதன்மை, அதிகரித்துவரும் அரசுக் கடன் ஆகியவை தங்க விலை உயர்வுக்குக் காரணங்கள் என எச்எஸ்பிசி சுட்டியது.

2025 பிற்பாதியில் தங்க விலையில் ஏற்பட்ட கடும் உயர்வையும் இடர் அதிகரிப்பையும் கருத்தில்கொண்டு, தங்க விலை உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்றும் 2026 முற்பகுதி முழுவதும் அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்எஸ்பிசி எதிர்பார்க்கிறது.

ஆனால், 2026 பிற்பாதியில் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம் நிகழும் என்றும் விலை ஓரளவு மிதமடையும் என்றும் எச்எஸ்பிசி எதிர்பார்க்கிறது.

குறிப்புச் சொற்கள்