கணினிச் சில்லுக்கான ரகசியக் கட்டமைப்பை அமைக்கிறது ஹுவாவெய்

1 mins read
e48fc6f5-c6c7-4d8c-9a56-e2d4c6522f4f
ஹுவாவெய், அரசாங்கத்திடமிருந்து ஏறக்குறைய 30 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவைப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஃஎப்பி

பெய்ஜிங்: அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்காக ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனம் சீனா முழுதும் ரகசியக் குறைகடத்தி (செமிகண்டக்டர்) வசதிகளைக் கட்டுவதாக வாஷிங்டனில் தளம் கொண்டுள்ள குறைகடத்தித் தொழில்துறைச் சங்கம் எச்சரித்துள்ளதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் கூறியது.

ஹுவாவெய் நிறுவனம் சென்ற ஆண்டு கணினிச் சில்லுத் தயாரிப்புத் துறையில் அடியெடுத்து வைத்ததாகவும் சீன அரசாங்கத்திடமிருந்து ஏறக்குறைய 30 பில்லியன் அமெரிக்க டாலர் (S$40.7 பில்லியன்) நிதியுதவி பெறுவதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்தது.

அந்நிறுவனம், தற்போது செயல்பாட்டிலுள்ள குறைந்தது இரண்டு ஆலைகளைக் கையகப்படுத்தியிருப்பதாகவும் மேலும் மூன்று ஆலைகளைக் கட்டுவதாகவும் சங்கம் குறிப்பிட்டது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, அமெரிக்க வர்த்தகத் துறை 2019ஆம் ஆண்டில் ஹுவாவெய் நிறுவனத்தைத் தனது ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டது.

இருப்பினும், பாதுகாப்புக்குத் தன்னால் ஆபத்து ஏற்படும் என்ற குற்றச்சாட்டை ஹுவாவெய் மறுத்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்