கிராபி விமான நிலையக் கழிவறையில் பேரளவிலான கஞ்சா பறிமுதல்

2 mins read
a9a43512-3f4c-4c24-a6b8-402f06b400c8
கழிவறைக்குள் நுழைந்து பயணப்பெட்டியைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதற்குள் ஏழு பொட்டலங்களில் கஞ்சா வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அதன் மொத்த எடை 15 கிலோ. - படம்: தி நேஷன்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பேங்காக்: தாய்லாந்தின் கிராபி அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறையில் பேரளவிலான கஞ்சா கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதை அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று (மார்ச் 8) விமான நிலையத்தின் மூன்றாவது மாடியில் அனைத்துலக முனையத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ள கழிவறையில் பெரிய பயணப் பெட்டி விட்டுச் செல்லப்பட்டது குறித்து விமானப் பாதுகாப்புப் பிரிவிடம் தகவல் அளிக்கப்பட்டது.

கழிவறையின் கதவுக்கு உள்ளிருந்து தாழ்பாள் போடப்பட்டிருந்தது.

யாரோ பயணப்பெட்டியைக் கழிவறைக்குள் வைத்துவிட்டு அங்கிருந்த சன்னல் வழியாக வெளியேறியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கழிவறைக்குள் நுழைந்து பயணப்பெட்டியைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதற்குள் ஏழு பொட்டலங்களில் கஞ்சா வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

அதன் மொத்த எடை 15 கிலோ.

பயணப்பெட்டியில் ஆடைகளும் இருந்தன.

விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கிராபி காவல்துறையினர் ஆராயந்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

பயணப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாளன்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற கடைசி விமானம் சிங்கப்பூருக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்து நேரப்படி இரவு 11.30 மணிக்கு கிராபி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டது.

கஞ்சாவை சிங்கப்பூருக்குக் கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருக்கக்கூடும் என்றும் அதைக் கழிவறையில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

கஞ்சா கடத்தப்பட்டிருந்தால் அது அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கஞ்சாவை விமான நிலையத்தின் கழிவறையில் விட்டுச் சென்றவர்களை அடையாளம் காணும் பணியில் கிராபி காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்