மனித விண்வெளிப் பயணம்: இஸ்ரோவின் ‘பாராசூட்’ வான்குடை சோதனை வெற்றி

1 mins read
9ba777c7-9ff2-4b53-8047-68fe8fdd3f6c
விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை குறைக்க உதவும் ‘ட்ரோக்’ பாராசூட்களை இஸ்ரோ சண்டிகரில் வெற்றிகரமாக சோதித்தது. - படம்: தினமலர்

சண்டிகர்: இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முக்கிய அங்கமாக, விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது பயன்படும் ‘பாராசூட்’ எனப்படும் வான்குடைகளை இஸ்ரோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக் ஆய்வகத்தில், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன. வியாழன், வெள்ளி (டிசம்பர் 18, 19) இரண்டு நாள்களுக்கு அந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ககன்யான் விண்கலம் விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை பாதுகாப்பாக குறைக்க உதவும் வான்குடைகளின் தரம், நம்பகத்தன்மை ஆகியன சோதனையில் மதிப்பிடப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் கற்பனை முயற்சிக்கு ககன்யான் திட்டம் என்று பெயரிட்டுள்ளது.

அதன்படி, விண்வெளி செல்லும் முதல் வீரர்களாக இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய நான்கு அதிகாரிகள், சிறப்புத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களைக் கொண்டு இஸ்ரோ பல்வேறு சோதனைகளை கட்டங்கட்டமாக செய்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்