மணிலா: சீனாவிலிருந்து வந்து பிலிப்பீன்ஸ் நாட்டவராக நடித்து மேயராகப் பதவி வகித்த ஏலிஸ் குவோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் குற்றத்திற்காக அவர் உட்பட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குவோ, மணிலாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகரின் மேயராகப் பதவி வகித்தார். நூற்றுக்கணக்கானோர் பலவந்தமாக மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இணையச் சூதாட்ட நிலையம் அவரின் கவனிப்பில் இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டது. அந்தச் சூதாட்ட நிலையத்தைச் சீனர்கள் நடத்தி வந்தனர்.
அலுவலகக் கட்டடங்கள், சொகுசு பங்ளாக்கள், பெரிய நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்ட அந்தப் பெரிய வளாகம் சென்ற ஆண்டு மார்ச் மாதம் சோதனையிடப்பட்டது. வியட்னாமைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தப்பியோடி காவல்துறையிடம் தகவல் கொடுத்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது நிலையம் செயல்பட்ட இடத்தில் 700க்கும் அதிகமான பிலிப்பீன்ஸ் நாட்டவர், சீனர்கள், வியட்னாமியர்கள், மலேசியர்கள், தைவானியர்கள், இந்தோனீசியர்கள், ருவாண்டா நாட்டவர் ஆகியோர் இருந்தனர். அங்கிருந்த ஆவணம் ஒன்றில் அந்த வளாகத்தை நடத்திய நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை, குவோ வகித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எட்டுப் பேரில் சிலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஒலிவியா டொரெவியாஸ் தெரிவித்தார். குவோ உட்பட நால்வர், சம்பந்தப்பட்ட வளாகத்தில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தது நிரூபிக்கப்பட்டதாக பிலிப்பீன்சின் திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புக் ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் நால்வர் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான செயல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
பிலிப்பீன்சிலிருந்துத் தப்பியோடியிருந்த 35 வயது குவோ, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தோனீசியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பம்பான் நகர மேயராக குவோ வாக்களிக்கப்பட்டபோதும் சீன நாட்டவர் என்ற முறையில் அவர் அப்பொறுப்புக்கு என்றுமே தகுதியானவராக இருக்க முடியாது என்று மணிலா நீதிமன்றம் ஒன்று கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
தொடர்புடைய செய்திகள்
தென்கிழக்காசியாவில் அண்மை ஆண்டுகளில் எல்லை தாண்டிய மோசடிக் குற்றங்கள் பெரிய அளவில் மோசமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மோசடிக்காரர்கள் அவற்றில் ஈடுபட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

