2024ல் மனிதநேய நெருக்கடி மோசமடையும் என எச்சரிக்கை

2024ல் மனிதநேய நெருக்கடி மோசமடையும் என எச்சரிக்கை

1 mins read
707c8cd6-b266-4c12-97ce-31b987c9c468
இவ்வாண்டு நவம்பர் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையிலான டோர்காம் எல்லையில் அமைந்துள்ள முகாமில் ஓய்வெடுக்கும் ஆஃப்கானிஸ்தான் குடிமக்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

மெக்சிகோ சிட்டி: 2024ஆம் ஆண்டில் உலகளவில் மனிதநேய நெருக்கடி ஏற்பட அதிகளவு வாய்ப்பிருப்பதாக அனைத்துலக மீட்புக் குழு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பருவநிலை மாற்றம், மோசமடையும் போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், கடன்சுமை அதிகரிப்பு, அனைத்துலக அளவில் ஆதரவு குறைதல் ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்கள் என்று அது குறிப்பிட்டது.

அடுத்த ஆண்டு மனிதநேய நெருக்கடியால் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என அக்குழு கருதும் 20 நாடுகளைத் தன் அவசரகாலக் கண்காணிப்புப் பட்டியலில் அது சேர்த்துள்ளது. அப்பட்டியலில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவை.

இவ்வாண்டு மனிதநேய உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 300 மில்லியனாக உயர்ந்ததையடுத்து இவ்வறிக்கையை அக்குழு வெளியிட்டது.

மேலும், தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேற நேரிட்டோரின் எண்ணிக்கை இவ்வாண்டு 110 மில்லியனாக உயர்ந்துள்ளது.

“இது மிகவும் மோசமான காலகட்டம்,” என அக்குழுத் தலைவர் டேவிட் மிலிபாண்ட் கூறினார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு, இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான ஆதரவு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்