மாஸ்கோ: உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டால் ரஷ்யா, மீண்டும் உலகப் பொருளியலிலும் ஐரோப்பிய எரிசக்திக் கட்டமைப்பிலும் சேர்த்துக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஓர்பான் கூறியுள்ளார்.
“அமெரிக்க அதிபரால் அமைதியைக் கொண்டுவர முடிந்தால் ரஷ்யா மீண்டும் உலகப் பொருளியல், ஐரோப்பியப் பாதுகாப்புக் கட்டமைப்பு ஆகியவற்றில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கிறேன்; ஐரோப்பிய பொருளியல், எரிசக்திக் கட்டமைப்பில்கூட சேர்த்துக்கெள்ளப்படலாம். அவ்வாறு நிகழ்ந்தால் அது ஹங்கேரியின் பொருளியலுக்குப் பெரிய அளவில் மெருகூட்டும்,” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பங்காளியான திரு ஓர்பான் குறிப்பிட்டார்.
இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இருவரும் அமைதி திரும்ப விரும்புவதாகத் தம்மிடம் கூறினர் என்று திரு டிரம்ப் தெரிவித்தார். திரு புட்டின், திரு ஸெலென்ஸ்கி இருவரும் புதன்கிழமையன்று (பிப்ரவரி 12) தம்மிடம் தனித்தனியே தொலைபேசியில் பேசிய பிறகு திரு டிரம்ப் அவ்வாறு சொன்னார்.
உக்ரேன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்குமாறு திரு டிரம்ப், முன்னணி அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்தது. அதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம், நிதி, ராணுவ ரீதியாக உக்ரேனுக்கு ஆதரவளித்து வருவதுடன் மாஸ்கோ மீது தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்நடவடிக்கைகளுக்கு எதிராக திரு ஓர்பான் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்.