ஸ்டாக்ஹோம்: ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்க்கிற்கு (László Krasznahorkai) 2025ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்படுகிறது.
நோபெல் பரிசை வழங்கும் ஸ்வீடன் அகாடமி வியாழக்கிழமை (அக்டோபர் 9) இதனை அறிவித்தது. பதக்கம், சான்றிதழுடன் 11 மில்லியன் குரோனர் (S$1.2 மில்லியன்) ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
பயங்கரவாதத்தின் மத்தியில், கலையின் சக்தியை மறுஉறுதிப்படுத்தும் க்ராஸ்னாஹோர்க்கின் உறுதியான, தொலைநோக்குப் பார்வைக்காக 2025ஆண்டின் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாகப் பரிசுக் குழு அறிவித்தது.
ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க சமகால எழுத்தாளர்களில் ஒருவரான இவரது படைப்புகள் மனிதரின் இருத்தலியல் போராட்டங்களை ஆழமாக ஆராய்பவை. நீண்ட, சிக்கலான வாக்கிய அமைப்புகள் கொண்ட க்ராஸ்னாஹோர்க்கின் எழுத்துகள் பிரபலமானவை.
தொலைதூரjg கிராமத்தைக் களமாகக் கொண்ட 1985ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது ‘சாடான்டாங்கோ’ (Satantangó) நாவல் ஹங்கேரியில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்டது.
‘சாடான்டாங்கோ’ (Satantangó), ‘தி மெலன்கலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (The Melancholy of Resistance) ஆகியவை இவரது முக்கியப் படைப்புகள் உள்பட இவரது பல நாவல்களை ஹங்கேரிய இயக்குநர் பேலா டார் (Béla Tarr) திரைப்படங்களாக்கி உள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டைனமைட் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபெல் நிறுவிய இந்த விருது, அமைதி, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளியல், அமைதி ஆகிய துறைகளில் சாதனை புரிபவர்களுக்கு 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.