முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்: மெல் கிப்சன்

முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்: மெல் கிப்சன்

1 mins read
e35f6cb9-7e93-47d4-bde2-73f522b2e002
அமெரிக்கத் திரைப்பட நடிகர் மெல் கிப்சன். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லாஸ் ஏஞ்சலிஸ்: ரசிகர்களின் மாநாட்டில் சைகை மொழிபெயர்ப்பாளரை கிண்டல் செய்வது போன்ற காணொளி இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியதைத் தொடர்ந்து நடிகர் மெல் கிப்சன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

‘ஃபேன் எக்ஸ்போ கனடா’ நிகழ்வில் தனது இந்தச் செயல் ‘யோசனையற்ற முட்டாள்தனம்’ என்று குறிப்பிட்ட 70 வயதான நடிகர், யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று வலியுறுத்தினார்.

“சில நேரங்களில் வெளிச்சம் நிறைந்த மேடையில் திடீரென நிறுத்தப்படும்போது மனம் நிலை கொள்ளாமல் போகலாம்,” என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த அறிக்கையில் கிப்சன் கூறினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் எந்தவித கெட்ட எண்ணமும் இல்லை என்று கூறிய அவர், இதனால் மனவேதனை அடைந்த எவரிடமும் நான் நிச்சயமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ஆகஸ்ட் 29 அன்று டொராண்டோவில் நடைபெற்ற ‘ஃபேன் எக்ஸ்போ கனடா’ நிகழ்வில், தனது திரையுலகப் பயணம் குறித்த கேள்வி-பதில் அமர்வில் கிப்சன் கலந்துகொண்ட போதே இந்தச் சர்ச்சை வெடித்தது.

‘பிரேவ்ஹார்ட்’ பட நாயகனான அவர், கூட்டத்தினரின் ஆரவாரத்திற்கு இடையே மேடைக்கு வந்தபோது, பார்வையாளர்களுக்காக சைகை மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருந்த மொழிபெயர்ப்பாளரின் பின்புறம் நின்று, பொருளற்ற சில கை அசைவுகளை காட்டியது காணொளியில் பதிவாகியிருந்தது.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, மொழிபெயர்ப்பாளரையும் காது கேளாதோர், செவிப்புலன் குறைந்தோர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கிப்சனை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

குறிப்புச் சொற்கள்