வாஷிங்டன்: உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்ய அதிபர் புட்டினுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இது பற்றிய செய்தியை சனிக்கிழமை (பிப்ரவரி 8ஆம் தேதி நியூயார்க் போஸ்ட் செய்தித்தாள் வெளியிட்டது.
அமெரிக்க ஆகாயப் படை விமானம் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் நடைபெற்ற நேர்காணலில் அவர் எத்தனை முறை அதிபர் புட்டினுடன் பேசியதாக திரு டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திரு டிரம்ப் தாம் சொல்லாதிருப்பதே நல்லது என்று குறிப்பிட்டதாக நியூயார்க் போஸட் தெரிவித்தது.
“புட்டின் மக்கள் மடிவதை தடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்,” என்று டிரம்ப் கூறியதாக நியூயார்க் போஸ்ட் கூறியது.
இது பற்றிக் கருத்துக் கூறும்படி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டதற்கு, அலுவலக நேரம் முடிவதற்குள், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினிடம் இருந்தோ அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிடம் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாம் அநேகமாக அடுத்த வாரம் உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கியை சந்திக்கலாம் என்று பிப்ரவரி 7ஆம் தேதி கூறினார்.