வாஷிங்டன்: அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க் இறுதிச்சடங்கில் தாம் கலந்துகொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் பிரிட்டனுக்குச் செல்லவுள்ளார். இதற்காக, செப்டம்பர் 16ஆம் தேதி வாஷிங்டனிலிருந்து அவர் புறப்படுவார். திரு கிர்க்கின் இறுதிச்சடங்கு எப்போது நடைபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது ‘அடுத்த வாரயிறுதியில்’ நடக்கும் என தாம் நம்புவதாக திரு டிரம்ப் கூறினார்.
டிரம்பின் ஆதரவாளரான, ‘டர்னிங் பாயிண்ட் யூஎஸ்ஏ’ என்ற ஆதரவுக் குழுவின் செயல் இயக்குநராக இருந்த திரு கிர்க், 31, ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். திரு டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, இளம் வாக்காளர்களைத் திரட்டி, அவருக்கு ஆதரவளிக்கச் செய்வதில் திரு கிர்க் முக்கியப் பங்காற்றினார்.
திரு கிர்க்கின் மனைவி எரிக்காவுடன் தாம் பேசியதாக அதிபர் டிரம்ப் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், திரு கிர்க்கிற்கு அமெரிக்காவின் உயரிய விருதான அதிபரின் சுதந்திரப் பதக்கத்தை, அவரது மறைவுக்குப் பிறகு அளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், திரு கிர்க்கைக் கொன்றவரைத் தேடும் பணி தொடர்கிறது. திரு கிர்க்கைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கியைக் கைப்பற்றிவிட்டதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 11) மத்திய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் அளிப்போருக்கு US$100,000 (S$128,000) வரை வெகுமதி வழங்கப்படும் என்று எஃப்பிஐ அறிவித்தது. மேலும், தொப்பி, கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு நபரின் புகைப்படங்களை எஃப்பிஐ வெளியிட்டுள்ளது. அந்த நபர் இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.