தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மஸ்க்குக்கு ஆதரவளிக்க டெஸ்லா கார் வாங்குவேன்: டிரம்ப்

1 mins read
7c062bf1-688d-4a80-a7b7-33550a478f7f
கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோ நகரில் உள்ள டெஸ்லா விற்பனை நிலையத்துக்கு அருகே அந்நிறுவனத்துக்கும் இலோன் மஸ்க்குக்கும் எதிராக நடந்த ஆர்ப்பாட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளராள இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதிய டெஸ்லா காரைத் தாம் வாங்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் டெஸ்லாவுக்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன; அந்நிறுவனத்தின் பங்கு விலையும் குறைந்தது. இவ்வேளையில் தமது முக்கியப் பங்காளியான மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் திரு டிரம்ப்.

அமெரிக்க மத்திய அரசாங்க ஊழியர்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். அந்நடவடிக்கையில், திரு டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்கி திரு மஸ்க் வகித்த பங்கைக் கண்டித்து அமெரிக்காவில் டெஸ்லாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

சென்ற வாரம், போர்ட்லண்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் விற்பனை நிலையத்துக்கு வெளியே சுமார் 350 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை, நியூயார்க் நகரில் டெஸ்லா விற்பனை நிலையத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமது ட்ரூத் சோ‌ஷியல் சமூக ஊடகத் தளத்தில் திரு டிரம்ப், திரு மஸ்க்கைத் தற்காத்துப் பதிவிட்டார். நாட்டுக்கு உதவ திரு மஸ்க், தன்னையே பணையம் வைத்து மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக திரு டிரம்ப் பாராட்டினார்.

“உண்மையிலேயே மிகச் சிறந்த அமெரிக்கரான இலோன் மஸ்க் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையையும் ஆதரவையும் வெளிப்படுத்த நாளை காலை புத்தம்புதிய டெஸ்லா காரை வாங்கப்போகிறேன்,” என்று திரு டிரம்ப் கூறினார்.

அதற்கு திரு மஸ்க், தமக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்