நோம்பென்: முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவாத் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி அவரின் தவறான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தப்போவதாக முன்னாள் கம்போடிய அதிபர் ஹுன் சென் மிரட்டல் விடுத்துள்ளார்.
திரு தக்சின் தாய்லாந்து மன்னர்களுக்குத் துரோகம் இழைத்தூாகவும் அதையும் தாம் அம்பலப்படுத்தப்போவதாகவும் ஒருகாலத்தில் அவரை உடன்பிறவா சகோதரர் எனக் கூறிய திரு ஹுன் சென் சொன்னார். எனினும், அம்பலப்படுத்துவதற்கு முன்பு இதன் தொடர்பில் முதலில் பேங்காக்கின் நடவடிக்கைகளைக் கவனிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
“முதலில் மற்றவர்கள் எனக்கு துரோகம் இழைக்க விடுவேன்; நான் அவர்களுக்கு முதலில் துரோகம் செய்யமாட்டேன். தக்சின் குடும்பம் தங்கள் நாட்டுக்கு எப்படிப்பட்ட துரோகத்தை இழைத்தது என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது ஓர் எச்சரிக்கை. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கவேண்டும், அவர்கள் தங்கள் தந்தையையும் மற்றவர்களையும் மதிக்க வேண்டும்,” என்றார் திரு ஹுன் சென். கம்போடியாவின் பிரெயா விஹியர் மாநிலத்தில் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்ட மக்களிடம் அவர் வியாழக்கிழமை (ஜூன் 26) பேசினார்.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் தாம் உதவிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இப்போது இத்தகைய பிரச்சினைகளை உருவாக்குவார் என்று தாம் நினைத்துப் பார்க்கவில்லை என திரு ஹுன் சென் குறைகூறினார். திரு தக்சினின் மகளான தற்போதைய தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்தைக் குறிப்பிட்டு அவர் பேசினார்.