தேசிய முன்னணி-பெரிக்கத்தான் நே‌ஷனல் ஒத்துழைப்பின் விரிவாக்கம் பற்றிப் பேச பாஸ் கட்சி தயார்

தேசிய முன்னணி-பெரிக்கத்தான் நே‌ஷனல் ஒத்துழைப்பின் விரிவாக்கம் பற்றிப் பேச பாஸ் கட்சி தயார்

2 mins read
9ef5c9e7-4599-4ced-830f-e06079ed5a34
பாஸ் கட்சித் துணைத் தலைவர் இப்ராகிம் துவான் மான். - படம்: ஃபேஸ்புக், இப்ராகிம் துவான் மான்

கோலாலம்பூர்: தேசிய முன்னணிக்கும் பெரிக்கத்தான் நே‌ஷனலுக்கும் இடையிலான பிணைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்க பாஸ் கட்சி தயாராக உள்ளது என்று அதன் துணைத் தலைவர் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கும் பின்னர் தேசிய அளவிலும் விரிவுபடுத்துவது பற்றிப் பேசுவதற்குக் கட்சி ஆயத்தமாய் இருப்பதாக அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலானில் கூட்டணியின் முடிவுகள் மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்தன என்றும் அதன் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கு இது ஓர் அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் திரு இப்ராகிம் கூறினார்.

“நெகிரி செம்பிலானில் இந்த ஒத்துழைப்பு மிகச் சிறந்த முடிவுகளையும் சாதனைகளையும் உருவாக்கியதை நாங்கள் பார்த்தோம்.

“பொதுமக்களின் மனநிலையை நாங்கள் பார்த்ததன் அடிப்படையிலும் இந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதன் அடிப்படையிலும் தேசிய அளவில் பேச்சுகள், விவாதங்களை நடத்தவும் இந்த ஒத்துழைப்பைத் தொடர்வதா என்பதை முடிவு செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார் அவர்.

மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடருமா என்ற கேள்விகளுக்குத் திரு இப்ராகிம் பதிலளித்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, பாஸ் கட்சி, நெகிரி செம்பிலானில் தொடர்ந்து எதிர்த்தரப்பில்தான் இருந்துவந்திருக்கிறது. இதுவரை சட்டமன்றத்தில் ஒருசில இடங்களையே அது வென்றுள்ளது.

ஆனால் அண்மை நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தல் திருப்பு முனையாக அமைந்துள்ளது. தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நே‌ஷனலும் இணைந்து அங்கு அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன.

எதிரெதிராய்ப் போட்டியிட வேண்டாம் என்ற இரு கூட்டணிகளின் முடிவு, வாக்காளர்களுக்குத் தெளிவான தகவலை அனுப்பியதாகத் திரு இப்ராகிம் சொன்னார்.

கட்சி உறுப்பினர்கள் தலைமையின் முடிவைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்வதும் இந்த உத்தியைச் செயல்படுத்துவதில் இருதரப்பும் இணைந்து பணியாற்றுவதுமே அடுத்த சவாலாக இருந்தது என்று அவர் கூறினார்.

மலாக்கா சட்டமன்றம் இன்னும் கலைக்கப்படவில்லை. அதனால் அம்னோ கட்சியுடன் முதற்கட்டப் பேச்சு எதுவும் நடைபெறவில்லை என்றும் திரு இப்ராகிம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஜோகூர்நெகிரி செம்பிலான்தேர்தல்கூட்டணிஒத்துழைப்பு