தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்று மாதங்களில் நான்காம் முறையாகக் குமுறிய எரிமலை

1 mins read
8be27ade-48ff-4d03-91b5-7d363bf37cc8
ஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரம் அருகேயுள்ள எரிமலை உமிழ்ந்ததால் வெளிப்பட்டு, ஆறுபோல் ஓடிய தீக்குழம்பு. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 4

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை ஒன்று, கடந்த டிசம்பரிலிருந்து நான்காவது முறையாக சனிக்கிழமை (மார்ச் 16) இரவு குமுறியது.

இரவு நேரத்தில் பேரளவில் புகையையும் தீக்குழம்பையும் உமிழ்ந்ததால் வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை 4.23 மணிக்கு எரிமலை குமுறத் தொடங்கியது. இதனால் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பு ஓடி, நிலத்தில் கிட்டத்தட்ட 2.9 கிலோமீட்டர் நீளத்திற்கு வெடிப்புப் பிளவுகள் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலைக் குழம்பு தெற்கு நோக்கி, அருகிலுள்ள கிரிண்டவிக் எனும் மீன்பிடி நகரத்தை நோக்கிப் பாய்ந்தது. அந்நகரில் ஏறத்தாழ 4,000 பேர் வசிக்கின்றனர். இதற்குமுன் பிப்ரவரியில் ஏற்பட்ட எரிமலைக் குமுறலால் அவர்கள் அனைவரும் அந்நகரைவிட்டு வெளியேறிய நிலையில், வெகுசிலர் மட்டுமே அங்குத் திரும்பி இருந்ததாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்நகரவாசிகள் அனைவரும் அங்கிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரியில் நிகழ்ந்த எரிமலைக் குமுறலால் அங்குப் பல வீடுகள் மண்ணோடு மண்ணாகிப் போயின.

இதற்கிடையே, அப்பகுதியில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக ஐஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

ஐஸ்லாந்தில் 30க்கும் அதிகமான எரிமலைகள் கனன்றுகொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட கிரிண்டவிக் நகரவாசிகள், தொலைவில் இருந்தபடி எரிமலைக் குமுறலைப் பார்க்கின்றனர்.
ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட கிரிண்டவிக் நகரவாசிகள், தொலைவில் இருந்தபடி எரிமலைக் குமுறலைப் பார்க்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்