சியாட்டில்: வர்த்தக விமானங்களை இயக்கும் விமானிகள் ஓய்வுபெறும் வயதை அனைத்தலக அளவில் 65லிருந்து 67ஆக உயர்த்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் (ICAO) யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளது.
உலகளாவிய விமானப் பயணங்களின் தேவை, விமானிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் ஓய்வு வயதைக் கூட்டலாம் என்பது அக்குழுவின் விருப்பமாக உள்ளது.
செப்டம்பர் 23ஆம் தேதி கூடவுள்ள ஐநா பொதுச் சபையில் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது.
இருப்பினும், ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமெரிக்காவின் பெரும்பாலான விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் 65 வயதுக்கு மேற்பட்ட விமானிகள் பணி செய்ய தடை செய்கின்றன. அனைத்துலகச் சட்டங்களும் அதற்குத் துணைபோகின்றன.
ஏறத்தாழ 350 விமான நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் (Iata), விமானிகளின் ஓய்வு வயதை ஈராண்டுகள் உயர்த்துவது “எச்சரிக்கையான, அதேநேரம் பாதுகாப்புடன் ஒத்துப்போகும் நியாயாமான யோசனை,” என்று தெரிவித்துள்ளது.