தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடுத்துநிறுத்தவில்லை எனில் ர‌‌ஷ்யா கட்டுக்கடங்காமல் போய்விடும்: ஸெலென்ஸ்கி

2 mins read
c4271f42-c302-4bd3-bf89-57c1b6b46a20
நட்பு நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் கூடுதலான நாடுகளை ர‌‌ஷ்யா மிரட்டும் என்கிறார் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி. - படம்: ராய்ட்டர்ஸ்.

நியூயார்க்: ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைத் தடுத்துநிறுத்தவில்லை என்றால் அவர் போரைத் தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போவார் என உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

நட்பு நாடுகள் ஒன்றுபட்டு வலுவான முடிவை எடுக்காவிட்டால் மேலும் பல நாடுகள் ர‌‌ஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் அவர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் திரு ஸெலென்ஸ்கி பேசினார்.

உலகளாவிய ஆயுதப் போட்டாப்போட்டியால் அனைத்து நாடுகளும் அச்சுறுத்தலுக்கு இலக்காவதாக அவர் சொன்னார்.

ராணுவத் தொழில்நுட்பம் நவீனமாகிவரும் சூழலில், எந்த நாடு பிழைத்துநிற்கும் என்பதை முடிவுசெய்யப்போவது ஆயுதங்களே என்றார் உக்ரேனிய அதிபர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலக அளவில் விதிமுறைகள் வகுக்கப்படுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பாரம்பரியப் போர்முறையைக் காட்டிலும் தானியங்கி வானூர்திகளையும் விமானங்களையும் உருவாக்குவது மேலும் கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கக்கூடும் என்றார் திரு ஸெலென்ஸ்கி.

ர‌‌ஷ்ய-உக்ரேனியப் போர் குறித்த நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மாற்றிக்கொண்டுள்ள வேளையில் திரு ஸெலென்ஸ்கியின் கருத்துகள் வந்துள்ளன. இழந்த அனைத்துப் பகுதிகளையும் உக்ரேனால் மீட்டுவிடமுடியும் என்று திரு டிரம்ப் முதன்முறையாக நம்பிக்கை தெரிவித்தார்.

ர‌‌ஷ்யாவின் ஆதிக்கத்துக்கு மோல்டோவா அடிபணியாமல் ஐரோப்பா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உக்ரேனியத் தலைவர் எச்சரித்தார். மோல்டோவா உக்ரேனுக்கும் ருமேனியாவுக்கும் இடையில் உள்ளது. புட்டினின் பார்வையிலிருந்து ஜார்ஜியாவையும் பெலருஸையும் பாதுகாக்கின்ற வாய்ப்பை ஐரோப்பா இழந்துவிட்டதாகத் திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

மோல்டோவா அதிபர் மையா சாண்டு நாட்டிற்குள் வன்முறையையும் அச்சத்தையும் பரப்ப ர‌‌ஷ்யா மில்லியன் கணக்கில் பணம் செலவிடுவதாக் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, ர‌‌ஷ்ய விமானங்களும் வானூர்திகளும் ஆகாயவெளிக்குள் அத்துமீறிப் பறந்தால் நேட்டோ நாடுகள் சுட்டுத்தள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். அதனைப் பாராட்டிய திரு ஸெலென்ஸ்கி அமெரிக்க அதிபருடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்ததாகச் சொன்னார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ ர‌‌ஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவுடன் பேச்சு நடத்தியிருக்கிறார்.

அதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது. உக்ரேனுடனான போரை நிறுத்த ர‌‌ஷ்யா அர்த்தமுள்ள வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற திரு டிரம்ப்பின் கோரிக்கையைத் திரு ரூபியோ அதில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சந்திப்புக் குறித்து ர‌‌ஷ்யா கருத்து எதனையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்