வெனிசுவேலா ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்: டிரம்ப்

2 mins read
682f3319-cf86-4b4e-80a0-04607c2e5a5c
கிரீன்லந்தையும் வசப்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஆஸ்டின்: வெனிசுவேலாமீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது அல்ல என்றும் வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவது நோக்கமில்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற அவர், அது வெனிசுவேலுக்கு எதிரான போர் அல்ல என்று வலியுறுத்தினார்.

அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுபடியே வெனிசுவேலா அதிபர் நிக்கலாஸ் மதுரோ கைதுசெய்யப்பட்டதாக திரு ரூபியோ குறிப்பிட்டார். திரு மதுரோ மென்ஹட்டன் மத்திய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அனைத்துலகச் சட்டத்தின்படி வெனிசுவேலாமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி திரு மதுரோவைச் சிறைபிடித்தது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் தற்காப்புக்காக அன்றி, ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தாக்கக்கூடாது என்று குறிப்பிடுகிறது.

வெனிசுவேலாவை அமெரிக்கா ஆக்கிரமிக்கவில்லை என்ற திரு ரூபியோ, கைது நடவடிக்கைக்காகவும் சட்ட அமலாக்கத்துக்காகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார்.

இதற்கிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகோஸ் அமெரிக்காவுடன் ஒத்துழைக்காவிட்டால் மற்றொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெனிசுவேலா அதன் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்குவதுடன் போதைப் பொருள் கடத்தலைக் கைவிடவேண்டும். இத்தகைய நிபந்தனைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றார் திரு டிரம்ப்.

திரு டிரம்ப்பின் செயலுக்கு அனைத்துலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் வேளையில், கிரீன்லாந்தையும் வசப்படுத்திக்கொள்ள திட்டமிடுவதாக அவர் கூறினார்.

டிரம்புக்கு பதிலடி கொடுத்த தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து பிரதமர் ஹென்ஸ் ஃபிரெடரிக் நில்சன் ‘போதும்’ என்று எச்சரித்தார். எனினும், வெனிசுவேலாமீது அமெரிக்கா தொடுத்த தாக்குதல் கிரீன்லாந்தின் அச்சத்தைத் தூண்டியுள்ளது.

“எங்களுக்கு கிரீன்லாந்து தேவை. அமெரிக்காவின் தற்காப்புக்கு அது அவசியம்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த ஃபின்லாந்து அதிபர் அலெக்செண்டர் ஸ்டப், “கிரீன்லாந்துக்காகவும் டென்மார்க்குக்காவும் எவரும் முடிவெடுக்க முடியாது. அவற்றுக்காக முடிவெடுக்கும் உரிமை அவற்றின் கைகளில்தான் உள்ளது,” என்றார்.

உலகிலேயே மிக அதிக எண்ணெய் வளமுள்ள நாடாகக் கருதப்படும் வெனிசுவேலா தன்னிடம் உள்ள மொத்த எண்ணெய் வளத்தில் சிறு பகுதியைத்தான் தோண்டி எடுத்துள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள்மீது பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய உலகின் பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்