தோக்கியோ: ஜப்பானின் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரும், பிரதமரும் ஆன சானே தக்காய்ச்சி, அந்நாட்டின் ஏழு அரசியல் கட்சியினருடன் தலைநகரில் உள்ள தேசிய செய்தித்தாள் சங்கத்தில் (JNPC) திங்கட்கிழமை (ஜனவரி 26) நடந்த கலந்துரையாடலில் உரையாற்றினார்.
அந்த உரையில், தைவான் விவகாரத்தில் ஏற்படும் மோதலைத் தவிர்க்கும் விதமாக ஜப்பான் விலகி நின்றால், அமெரிக்காவுடனான உத்திப்பூர்வ கூட்டணி பிளவுபட்டுபோகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும் இதற்கு முன்பு ஜப்பான் ராணுவ நடவடிக்கைவழி தைவானுக்கு உதவும் என்று கூறி சீனாவின் சீற்றத்தை எதிர்கொண்டதால், அதுபற்றி எதையும் கூறவில்லை.
பிரதமர் தக்காய்ச்சியின் உரை, நாடுமுழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தைவான் குறித்து கருத்துகள் வெளியிட்டு, பிரதமர் தக்காய்ச்சி மீண்டும் சீனாவைச் சீண்டுவதாகக் குற்றம்சாட்டினார்.
கடந்த நவம்பர் மாதம் சீனா தைவானைத் தாக்கும் பட்சத்தில், ஜப்பான் அதன் ராணுவத்தைக் கொண்டு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பதிலளித்தது இருநாட்டு உறவை பெரிதும் பாதித்தது. சீனா அதன் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தி, விமானப் பயணங்களை ரத்து செய்து, கடுமையான விமர்சனைங்களை முன்வைத்து, ஜப்பான் அதன் கூற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்யப்படும் தைவானைத் தனது மாநிலமாகச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது.
“தைவான் தொடர்பாக சீனாவும் அமெரிக்காவும் மோதிக்கொண்டால் ஜப்பான் ராணுவ ரீதியில் செயல்படும் என்பது அல்ல இதன் பொருள் என்பதை தெளிவுபடுத்துகிறேன். தைவானில் மிகவும் மோசமான சம்பவங்கள் நடந்தால் ஜப்பானும் அமெரிக்காவும் அங்குள்ள தங்கள் குடிமக்களைக் காப்பாற்றவேண்டும். அச்சமயம் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் தாக்கப்பட்டு ஜப்பான் பின்வாங்கினால் நம் உறவு பிளவுபட்டுவிடும். எனவே தற்போதைய நிலையில் உள்ள சட்டத்துக்கு உட்பட்டு முழுமையான முடிவை நாம் எடுக்கவேண்டும்,” என்று பிரதமர் விவரித்தார்.
மேலும் விவரங்களை வெளியிடாமல், கடந்த நவம்பர் மாதம் அவர் தெரிவித்த கருத்துகள், ஜப்பானின் நீண்டநாள் கொள்கைகள் சார்ந்தே உள்ளன என்றார். அவரது கருத்துகளை சீனா தவறாகப் புரிந்துகொண்டுள்ளது எனவும் பிரதமர் சனேய் தக்காய்ச்சி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஜப்பானில் தேர்தல் நடக்கவுள்ளது. அதன்மீது கவனம் வைத்து பிரதமர் இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

