கோலாலம்பூர்: பினாங்கு அருகே தடுத்துவைக்கப்பட்ட இரண்டு கப்பல்களை மலேசிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
அவற்றிடமிருந்து அதிகாரிகள் கடன்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கப்பல்கள் இரண்டும் சட்டவிரோதமாக எண்ணெய்ப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒன்றான ‘ஆர்செலிப்ரா’ செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) செந்தோசாவைக் கடந்துசென்றது.
நோரா, ஆர்செலிப்ரா என்ற அந்தக் கப்பல்கள், பினாங்கின் வடக்கே சென்ற மாதம் (ஜனவரி) 29ஆம் தேதி இடைமறிக்கப்பட்டன. சட்டவிரோதமாக எண்ணெய்ப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாய்ச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவை தடுத்துவைக்கப்பட்டன.
தடைசெய்யப்பட்ட எண்ணெய் அவற்றில் கொண்டுசெல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. அத்தகைய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்படுவதைத் தடுக்க உரிமையாளர்களை மறைத்தோ கொடிகளை மாற்றியோ எண்ணெய்க் கப்பல்கள் மோசடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை நடைபெறும் நிலையில் கடன்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு இரு கப்பல்களையும் விடுவித்ததாகப் பினாங்குக் கடல்துறை அமைப்பின் இயக்குநர் முகம்மது சஃபி முகம்மது ரம்லி கூறினார்.
“300,000 ரிங்கிட் (S$97,000) பெறுமான கடன்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு சனிக்கிழமை கப்பல்கள் விடுவிக்கப்பட்டன. வழக்கு விசாரணை நடைபெறுகிறது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) கூறினார்.
ஆர்செலிப்ரா கப்பலில் கெமரூனின் கொடி பறக்கிறது. ஏற்கெனவே அது ஹாங்காங், கிரீஸ், மால்ட்டா, வியட்னாம் ஆகியவற்றின் கொடிகளை ஏந்திச் சென்றிருந்தது. நோரா கப்பலில் கயானாவின் கொடி உள்ளது.
ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்குப் பொருள்கள் மாற்றப்படும் சட்டவிரோதச் செயல்கள் அண்மை ஆண்டுகளில் மலேசியாவில் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகிறது. அவை பொதுவாக ஜோகூருக்குக் கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால் நடக்கும் என்றும் பினாங்கிற்கு அருகில் நடப்பது அரிது என்றும் தெரிவிக்கப்பட்டது.

