ஜோகூர் பாரு: மலேசியாவில் சட்டவிரோதமாக இணையம் வழி வாடகைச் சேவைகளை வழங்கிய சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நான்கு வாகனங்கள் சாலைப் போக்குவரத்துத் துறையிடம் பிடிபட்டுள்ளன.
அத்துறையின் தலைமை இயக்குநர் ஏடி ஃபத்லி ரம்லி, 30, 40 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூரர்களிடமிருந்து பல பயன்பாட்டு சொகுசு வாகனங்களும் ஒரு வேனும் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார்.
“சட்டவிரோதமாக வாடகை வாகனங்களை ஓட்டுவோருக்கு எதிராக ஆகஸ்ட் 9ஆம் தேதியிலிருந்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில் பிடிபட்ட வாகன ஓட்டுநர்கள் சிங்கப்பூரையும் மற்ற நாடுகளையும் சேர்ந்த பயணிகளை ஜோகூருக்குள் அழைத்துவந்தனர்,” என்றார் அவர்.
மலேசியாவில் வாடகை வாகனச் சேவைகளை வழங்குவதற்கு அவர்களிடம் முறையான உரிமம் இல்லை என்றும் திரு ஏடி ஃபத்லி குறிப்பிட்டார்.
அத்துடன் மலேசிய சாலை வரி கட்டியதற்கும் பொதுச் சேவை வாகனத்தைப் பதிவு செய்ததற்குமான ஆவணங்கள் ஓட்டுநர்களிடம் இல்லை என்றும் அவர் சொன்னார்.
ஓட்டுநர்கள் சேவை குறித்துச் சமூக ஊடகங்களிலும் செயலிகளிலும் விளம்பரம் செய்கின்றனர்.
ஜோகூர் பாரு செல்ல ஒருவருக்குக் கிட்டத்தட்ட $180 (591 ரிங்கிட்) கட்டணத்தை அவர்கள் வசூலிக்கின்றனர்.
லெகோலேண்ட் மலேசியா செல்வதற்குக் கட்டணம் ஏறக்குறைய $200 (657 ரிங்கிட்). ஈப்போவுக்குக் கட்டணம் சுமார் $1,200 (3,946 ரிங்கிட்).
தொடர்புடைய செய்திகள்
“இந்த ஓட்டுநர்கள் மலேசிய அரசாங்கத்திடமோ நிலப் பொதுப் போக்குவரத்து அமைப்பிடமோ சாலைப் போக்குவரத்துத் துறையிடமோ ஒப்புதல் எதனையும் பெறவில்லை,” என்று திரு ஏடி ஃபத்லி தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஒருவேளை மலேசியாவில் விபத்து நேர்ந்தால், அதனால் பயணிகள், ஓட்டுநர்களுக்கு மட்டுமல்லாமல் இரு தரப்பு உறவுக்கும்கூடக் கடும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று திரு ஏடி ஃபத்லி கூறினார்.