பாலியில் சட்டவிரோதக் கடன் கும்பல் பிடிபட்டது; சிங்கப்பூரர் இருவர் உட்பட 17 பேர் கைது

பாலியில் சட்டவிரோதக் கடன் கும்பல் பிடிபட்டது; சிங்கப்பூரர் இருவர் உட்பட 17 பேர் கைது

படம்: நுரா ராய் குடிநுழைவுத் துறை

28 Oct 2026 - 11:16 am

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித்தீவில் சட்டவிரோதமாக இணையவழிக் கடன் தொழில் நடத்திவந்த சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர் இருவர் உட்பட வெளிநாட்டினர் 17 பேரை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வடக்கு குட்டாவின் டாலுங் கிராமத்தில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் அக்டோபர் 22ஆம் தேதி குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பாலித்தீவின் விமான நிலையக் குடிநுழைவுத் துறைத் தலைவர் முகமது நோவியாந்திரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோரில் 15 பேர் மலேசியர்கள்; இருவர் சிங்கப்பூரர்கள்.

“கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் அனைவரும் தங்களின் விசாவைத் தவறாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது,” என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறிய திரு நோவியாந்திரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அந்தச் சட்டவிரோதத் தொழிலை மேலாளர்கள் மூவர் வழிநடத்தியதாகவும் மற்றவர்கள் நிர்வாக ஊழியர்களாகப் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்கும்பலைச் சேர்ந்தோர், ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் தனது சேவையைப் பரப்புரை செய்து, வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் எண்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு வழிகாட்டினர். கடன் பெற விரும்புவோரின் வேலை விவரம், சம்பளச் சீட்டு, தொடர்பு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அவர்கள் சேகரித்தனர்.

வாடிக்கையாளர்களின் பின்னணியை மதிப்பிட்டு 20 முதல் 30 விழுக்காடு வரை வட்டி வசூலிக்கப்பட்டது. அந்தக் கும்பல் இந்தோனீசியாவுக்கு வெளியே வசிக்கும் வெளிநாட்டவர்களையே இலக்காகக் கொண்டு இயங்கியுள்ளது. இந்தோனீசியக் குடிமக்கள் எவரும் இதில் பாதிக்கப்படவில்லை என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நிர்வாகக் குழு ஒவ்வொன்றுக்கும் மாதந்தோறும் US$7,800 லாப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஊழியர்கள் ஒவ்வொருவரும் மாதத்திற்கு US$1,200 முதல் US$1,600 வரை சம்பாதித்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையிட்டதில், அக்கும்பல் ஆறு மாதங்களுக்கும் மேலாக பாலித்தீவில் இயங்கிவந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்