கோலாலம்பூர்: முப்பது ஆண்டுகளாக உடற்பிடிப்புச் சேவை வழங்கும் பெயரில், ஜாலான் பசார் பாருவில் வர்த்தகம் ஒன்று பாலியல் சேவைகளைக் கள்ளத்தனமாக வழங்கி வந்துள்ளது.
இதுகுறித்து மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் தெரியவந்தது.
சிறப்பு அமலாக்கச் சோதனை நடத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட வளாகத்தில் பாலியல் சேவைகள் வழங்கப்பட்டதைத் தாங்கள் கண்டறிந்ததாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ கூறினார்.
“பொதுமக்களிடமிருந்து வந்த புகார்கள், மூன்று வாரமாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகாரிகள் அவ்விடத்துக்குச் சென்றனர். அங்கு ஓர் இந்திய நாட்டவர், 37 வியட்நாமிய பெண்கள், மூன்று இந்தோனீசிய பெண்கள், ஒரு மியன்மார் பெண், ஐந்து பங்ளாதேஷ் ஆடவர்கள், இரண்டு வியட்நாமிய ஆடவர்கள், ஒரு பாகிஸ்தானிய ஆடவர், ஓர் இந்தோனீசிய ஆடவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள்,” என்றார் அவர்.
அவர்கள் 24 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடப்பிதழ்கள், உடற்பிடிப்பு எண்ணெய் பாட்டில்கள், ஆணுறைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, வர்த்தகத்தின் வளாகத்தில் நிலத்தடி மாடியில் உடற்பிடிப்புச் சேவைகளும் முதல் மாடியில் பாலியல் நடவடிக்கைகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

