சிங்கப்பூருக்கு இந்தோனீசியா அனுப்பும் இயற்கை எரிவாயு அளவைக் குறைத்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறைவே என்று எரிசக்திச் சந்தை ஆணையம் (இஎம்ஏ) தெரிவித்துள்ளது.
அது நாட்டின் அன்றாட மொத்த எரிவாயுத் தேவையில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவே என்று ஆணையம் கூறியது.
எரிவாயு விநியோகம் 18 நாள்களுக்கு நாளொன்றுக்கு 31 மில்லியன் கன அடி விகிதம் குறையும் என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார். நாட்டின் அன்றாடத் தேவை 1,000 அலகுகளுக்கு மேல் உள்ள நிலையில், இது மிகக் குறைந்த அளவே ஆகும்.
விநியோகத் தடையை எதிர்கொள்ள ஒப்பந்த விதிமுறைகளின்படி உரிய நிவாரண நடவடிக்கைகளை இறக்குமதியாளர்கள் மேற்கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய நிலைமையைச் சமாளிக்கத் தேவையான மாற்றுத் திட்டங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாக ஆணையம் கூறியது.
அண்மை மாதங்களில் பராமரிப்புப் பணிகளுக்காக இதைவிட அதிக அளவில் விநியோகம் குறைந்தபோதும் மாற்று வழிகள் மூலம் எவ்விதப் பிரச்சினையுமின்றி எரிவாயு பெறப்பட்டது.
தேவைப்படும் எந்த நேரத்திலும் திரவ இயற்கை எரிவாயுவைக் கூடுதலாக இறக்குமதி செய்யச் சிங்கப்பூர் கேஸ்கோ நிறுவனம் தயார்நிலையில் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள மற்ற வழிகளிலிருந்தும் சிங்கப்பூர் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. மின் உற்பத்தி நிறுவனங்களும் போதுமான டீசல் உள்ளிட்ட கூடுதல் எரிபொருள் இருப்பைக் கொண்டுள்ளன.
உள்நாட்டு மின்சாரத் தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கில் சிங்கப்பூருக்கான எரிவாயு ஏற்றுமதி குறைக்கப்பட்டதாக இந்தோனீசியாவின் எண்ணெய், எரிவாயுக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பான எஸ்கேகே மிகாஸ் தெரிவித்தது.
நட்டுனா, சுமத்ரா பகுதிகளிலிருந்து வரும் எரிவாயு அந்நாட்டின் உள்ளூர் மின் உற்பத்தித் தேவைகளுக்காகத் திருப்பிவிடப்படுகிறது.
இந்தத் தற்காலிக விநியோகக் குறைப்பால் சில வாடிக்கையாளர்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிவாயு இறக்குமதி நிறுவனமான கேஸ் சப்ளை கூறியுள்ளது. சிஎன்ஏ ஊடகம் கேட்ட கேள்விகளுக்கு அது பதில் தந்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் நிலைமையைக் கையாள விநியோகத் தரப்புடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
சிங்கப்பூரின் மின்சார உற்பத்தியில் ஏறக்குறைய 95 விழுக்காடு இயற்கை எரிவாயு மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
