பராகுவே அதிபர்மீது அரசியல் குற்றச்சாட்டு

பராகுவே அதிபர்மீது அரசியல் குற்றச்சாட்டு

படம்: ஏஎஃப்பி

07 Nov 2026 - 3:17 pm

2 mins read

பராகுவே: பராகுவேவில் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள அந்நாட்டு அதிபர் சான்டியாகோ பென்யா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

திரு பென்யாவின் தனியார் வர்த்தக வட்டிகளுடன் தொடர்புடைய மின்னிலக்க வங்கி முடங்கியதை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த வாரத் தொடக்கத்தில் உயினோ வங்கி முடங்கியதைத் தொடர்ந்து நாடளவில் ஏற்பட்ட நெருக்கடியால் திரு பென்யாவின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே அவரைப் பதவியிலிருந்து நீக்கும்படி வாக்களித்தனர். அதையடுத்து திரு பென்யா கைதுசெய்யப்பட்டார்.

ஆனால், பதவியிலிருந்து தாமாகவே விலகுவதாகத் திரு பென்யா கூறியிருந்தார். அதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்மீது அரசியல் குற்றச்சாட்டுடன் முறைகேடான நடத்தைக்கான குற்றச்சாட்டையும் சுமத்தினர்.

வங்கியின் உரிமையாளராக நிறுவனத்தில் கடந்த ஆண்டுவரை திரு பென்யா பங்குகள் வைத்திருந்தார். அந்த நிறுவனம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தது.

பராகுவேவின் மத்திய வங்கி முடங்கிய வங்கியைக் கைப்பற்றியதால் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோரால் தங்கள் சேமிப்புகளைப் பெற முடியாமல் போனது.

வங்கியில் பணம் போட்டுவைத்திருந்த கிட்டத்தட்ட மூன்று மில்லியன் பேரால் தங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து தலைநகர் அசன்சியோனில் ஆர்ப்பாட்டங்கள் மூண்டன.

வங்கியின் ஒழுங்குமுறை மேற்பார்வையைத் தமக்குச் சாதகமாகக் கையாண்டது, ஓய்வூதிய நிதியைத் திசை திருப்பியது, மத்திய வங்கியுடன் தொடர்புடைய நிறுவன அளவிலான மூடிமறைப்பில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பான அரசியல் குற்றச்சாட்டுகளைத் திரு பென்யா எதிர்நோக்குகிறார்.

நவம்பர் 5ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், மன்னிப்புக் கேட்டதுடன் மக்களின் நம்பிக்கையை எந்தவிதத்திலும் உடைக்க தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றார்.

குறிப்புச் சொற்கள்