தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் யூன் வரவில்லை: முதற்கட்ட விசாரணை ஒத்திவைப்பு

2 mins read
ec591311-173a-4781-934e-898faa7c7c85
தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) பிற்பகலில் திரு யூனுக்கு எதிரான விசாரணையைத் தொடங்க நீதிமன்றம் வந்து அமர்ந்தனர். - படம்: இபிஏ

சோல்: அதிபர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட யூன் சுக் இயோல் மீதான பதவிநீக்க விசாரணையை தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) தொடங்கியது.

இருப்பினும், திரு யூன் முன்னிலை ஆகாததால் முதற்கட்ட விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

திரு யூன் 2024 டிசம்பர் 3ஆம் தேதி திடீரென்று அறிவித்த ராணுவச் சட்டம் சர்ச்சையைக் கிளப்பியது. ஆறு மணி நேரத்தில் அந்தச் சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் தென்கொரிய அரசியல் வரலாற்றில் ஆக மோசமான சம்பவங்கள் நிகழ அந்த அறிவிப்பு காரணமாக அமைந்தது.

தம்மை தற்காலிக நீக்கம் செய்வதற்கான வாக்களிப்பைத் தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றத்திற்கு ராணுவ வீரர்களை அவர் ஏவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருப்பினும், பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திரு யூன் அதிபர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

அப்போது முதல் அவர் அதிபர் மாளிகைக்கு உள்ளேயே இருந்து வருகிறார். ராணுவச் சட்ட அறிவிப்பு தொடர்பான விசாரணைக்கு வருமாறு விசாரணை அதிகாரிகள் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவற்றை திரு யூன் பொருட்படுத்தவில்லை.

அதனால், அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கைது செய்யச் சென்ற காவல்துறையினரைத் தடுக்க அதிபர் மாளிகைக் காவல் படையினரை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பதவி நீக்கம் தொடர்பான முதற்கட்ட விசாரணையை அரசியலமைப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 1 மணி) தொடங்கியது.

ஐந்து கட்டங்களாக விசாரணை நடத்த நீதிமன்றம் திட்டமிட்டு உள்ளது.

இருப்பினும், விசாரணைக்கு திரு யூன் வராததால், நீதிமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாக நீதிமன்றப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பாதுகாப்புக் காரணங்களால் திரு யூன் விசாரணைக்கு வர இயலவில்லை என்று அவரது சட்டக் குழு கூறியது.

ஆனால், ஜனவரி 16ஆம் தேதி இரண்டாம் கட்ட விசாரணை தொடங்கும்போதும் திரு யூன் வராவிட்டால் அவர் இல்லாமலேயே விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, ஜனவரி 21, ஜனவரி 23, பிப்ரவரி 4 ஆகிய நாள்களில் அடுத்தடுத்த விசாரணை நடைபெறும் என்றும் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

அந்த நீதிமன்றத்தின் எட்டு நீதிபதிகள் இரண்டு அம்சங்கள் தொடர்பாக முடிவெடுப்பர்.

முதலாவது, திரு யூனின் ராணுவச் சட்ட அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதா, அது சட்டவிரோதமானதா - இரண்டில் எது சரி என்பது குறித்து விசாரித்து அவர்கள் முடிவெடுப்பர்.

அடுத்ததாக, இந்த இரண்டில் ஒன்று அவரைப் பதவிநீக்கம் செய்யப் போதுமான ஆதாரமாக விளங்குமா என்பதையும் அவர்கள் தீர்மானிப்பர்.

குறிப்புச் சொற்கள்