மைக்ரோசாஃப்ட் டீம்சில் ஆள்மாறாட்டம்; $120,000 இழப்பைத் தவிர்த்த நிறுவனம்

மைக்ரோசாஃப்ட் டீம்சில் ஆள்மாறாட்டம்; $120,000 இழப்பைத் தவிர்த்த நிறுவனம்

படம்: சாவ்பாவ்

19 Sep 2026 - 4:12 pm

2 mins read

உள்ளூர்ச் சுகாதார நிறுவனம் ஒன்று, மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) உரையாடல் வழியே நிறுவனத் தலைவரைப்போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களின் சதிவலையிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளது.

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியிடம் அதன் ‘தலைவர்’, ‘நிர்வாக இயக்குநர்’ இருவரும் நிதி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டபோது, மேலதிகாரிகளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதே அவரது இயல்பான எண்ணமாக இருந்தது.

உண்மையில் அவருக்குத் தெரியாமல், மோசடிக்காரர்கள் அந்த மேலதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்திருந்தனர். தனது ‘மேலதிகாரிகளின்’ உத்தரவின்பேரில் செயல்பட்ட தலைமை நிதி அதிகாரி, மோசடிக்காரர்களின் தூண்டுதலால் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து $120,000 தொகையை அனுப்பவிருந்தார்.

உண்மையான நிர்வாக இயக்குநர் அவ்வாறு தாம் உத்தரவிடவில்லை என்று மறுத்தபோதுதான், தலைமை நிதி அதிகாரி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான 72 வயது ஜேன் (உண்மைப் பெயரன்று), மோசடிக்காரர்கள் மிகவும் அவசரம் காட்டியதால் தமது சக ஊழியர் பதற்றமடைந்ததாகக் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விதிமுறைகள் காரணமாகப் பணம் தப்பியது என்றார் அவர்.

2026ன் முற்பாதியில் அதிக தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் இது மூன்றாமிடம் பிடித்தது.

தொழில் மின்னஞ்சல் மோசடி மூலம் இழக்கப்பட்ட தொகை, இந்த ஆண்டின் முற்பாதியில் $57.3 மில்லியனாகப் பதிவானது. ஒப்பு நோக்க, சென்ற ஆண்டின் அதே காலகட்டத்தில் அது $19.5 மில்லியனாக இருந்தது.

காவல்துறை வெளியிட்ட மோசடிப் புள்ளிவிவரங்களுக்கான அரையாண்டு அறிக்கையில், இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் முற்பாதியில் 156ஆக இருந்தாகவும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அது 262ஆக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் நிறுவனத்தின் விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது உயரதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஊழியர்களை ஏமாற்றி போலி வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைத் திருப்பி விடுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, 2026ன் முதல் ஆறு மாதங்களில் சிங்கப்பூரில் $410.6 மில்லியன் பறிபோனது.

குறிப்புச் சொற்கள்