ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கட்கிழமை (அக்டோபர் 26) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று ஜோகூர் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முஹம்மது நகீப் எம்.டி. கசாலி தெரிவித்தார்.
ஜோகூர் கல்வி, தகவல் குழுவின் தலைவரான அவர், ஜோகூர் மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். தற்போதைய புகைமூட்டச் சூழல், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டது.
“கடந்த ஐந்து நாள்களாக ஜோகூர் முழுவதும் காற்றுத் தரக் குறியீடுகள் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
“அக்டோபர் 24ஆம் தேதி முதல் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம், அதிகரித்த ஈரப்பதம், எதிர்பார்க்கப்படும் மழைப்பொழிவு ஆகியவை புகைமூட்ட பாதிப்பைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் சனிக்கிழமை (அக்டோபர் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பிற பள்ளிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜோகூர் சுகாதாரத் துறை மேற்கொண்ட சுகாதார அபாய மதிப்பீடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.
“பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவானது, ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்துவதற்கான அவசியம், மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வுக்கான தயாரிப்புகளைக் கருத்தில் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைச் செயல்படுத்துவதை ஜோகூர் கல்வித் துறை ஒருங்கிணைக்கும் என்று முஹம்மது நகீப் தெரிவித்தார்.
தற்போதைய காற்றுத்தரக் குறியீடுகள், நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முகக்கவசம் அணிவதும், பள்ளி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் இதில் அடங்கும்.
மாநில அரசும் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும், ஏதேனும் மாற்றங்கள் அல்லது மேலதிக நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
“ஜோகூர் மாநிலக் குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்யும் அதே வேளையில், பள்ளிச் சமூகத்தின் பாதுகாப்பு, ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
