மாசசூசெட்ஸ்: அமெரிக்கப் பள்ளிகளில் நடப்பில் உள்ள திறன்பேசித் தடை மாணவர்களின் கல்விச் செயல்திறனை மேம்படுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நாடளவில் நடைபெற்ற ஆகப் பெரிய ஆய்வில் திறன்பேசித் தடைக்கு முன்னும் பின்னும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஒப்பிடப்பட்டன.
ஒருசில பள்ளிகள் திறன்பேசிக்கான தடைகளைக் கடுமையாகப் பின்பற்றுகின்றன. அங்குப் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரம் முடியும் வரை தங்கள் திறன்பேசிகளைப் பைகளில் பூட்டி வைத்திருக்கவேண்டும்.
அத்தகைய மாணவர்கள், கணிதம், வாசிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் மேம்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கை ஆய்வு நிலையம், நவம்பர் 17ஆம் தேதி ஆய்வை வெளியிட்டது.
அமெரிக்க மாணவர்களின் மதிப்பெண்கள் கடந்த பத்தாண்டுகளில் சரிந்தன. திறன்பேசிகளின் பயன்பாடு அதிகரித்தபோது மாணவர்களின் மதிப்பெண்கள் சரிந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இரண்டுக்குமான சம்பந்தம் குறித்து ஆராயப்பட்டது.
“இதற்குமுன் நடத்தப்பட்ட ஆய்வுகளில் திறன்பேசித் தடைகள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டது,” என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான தாமஸ் கேன், “அது தவறு என்று நினைக்கிறோம்,” என்றார்.
2021ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை கல்விக் கொள்கை ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஆய்வில் 4,600 பள்ளிகளைச் சேர்ந்த 3.3 மில்லியன் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆய்வு தொடங்கிய நேரத்தில் அவர்கள் பத்தாம் வகுப்பு பயின்றுகொண்டிருந்தனர்.
இலையுதிர்காலம் தொடங்கி வசந்த காலம் வரை மாணவர்களின் கல்விச் செயல்திறன் கண்காணிக்கப்பட்டது. கடுமையான திறன்பேசித் தடைகளைக் கடைப்பிடிக்கும் பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களும் அத்தகைய தடைகள் இல்லாத பள்ளி மாணவர்களின் மதிப்பெண்களும் ஒப்பிடப்பட்டன.
இருப்பினும், திறன்பேசித் தடைகள் மட்டுமே மாணவர்களின் மதிப்பெண்களை உயர்த்திவிட முடியாது என்றும் சில நிபுணர்கள் தெரிவித்தனர்.
2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திறன்பேசிகளுக்குப் பதிலாக ஒருவருக்கு ஒருவர் குறுஞ்செய்திகள் அனுப்ப மடிக்கணினிகளைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
