இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) இரவு இஸ்லாமாபாத் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
சிகிச்சை முடிந்த பிறகு அவரை மீண்டும் ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அந்நாட்டு அரசு அடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் திரு கான், கண் பரிசோதனை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தார்.
மேலும், அவருக்கு ரத்த அழுத்தப் பிரச்சினை இருந்ததால், செவ்வாய்க்கிழமை இரவு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கான், பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்கிறார்; ஆனால், அந்நாட்டு அரசு அதனை மறுக்கிறது.
சிறையில் இருக்கும் 74 வயது கானின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் வலப்பக்க கண் பார்வைத்திறனைக் கணிசமாக இழந்துவிட்டதாகவும் அவரின் வழக்கறிஞர்கள் கூறினர். கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டது.
