இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி, பெஷாவரில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நீண்ட பேரணியை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அது குறித்த தகவலை கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் முதல்வர் சோஹைல் அஃப்ரிடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திரு சோஹைல் பிடிஐ கட்சியைச் சேர்ந்தவர்.
2023ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் திரு இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) பேரணியைத் தொடங்க பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிடிஐ கட்சி நடத்திய மாபெரும் போராட்டம், பாதுகாப்புப் படையினருக்கும் கட்சியினர்க்கும் இடையே பயங்கர மோதலாக மாறியது.
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தலைநகரான இஸ்லாமாபாத்திற்குள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் இவ்வாரத் தொடக்கம் முதலே பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
முக்கிய நெடுஞ்சாலைகளைக் கொள்கலன்கள் கொண்டு தடுத்ததுடன் பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளைப் பாகிஸ்தான் அரசு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது.
பொது ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்பதைக் காரணமாகக் கூறி, அண்மைய நாள்களில் இம்ரான் கானின் சகோதரிகள் மூவரையும் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோரையும் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
