கோலாலம்பூர்: மலேசியாவில் பொட்டலம், ‘கொரியர்’ போன்ற தூதஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திப் போதைப்பொருள்களை விநியோகிக்கும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாதங்களில், தூதஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திப் போதைப்பொருள்களை விநியோகித்ததாக 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு முழுவதும் அதுபோன்ற 65 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதக் கும்பல்கள் போதைப்பொருள்களை எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கடத்துவதற்கு இத்தகைய தூதஞ்சல் சேவைகளையே பெரிதும் நாடுகின்றன என்று புக்கிட் அமான் பகுதியின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹூசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
இவ்வாண்டு முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 1,545.17 கிலோகிராம் போதைப்பொருள்களும், 13,957.38 லிட்டர் போதைப்பொருள் திரவமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் ‘கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்’, ‘கெட்டமைன்’, கஞ்சா, ‘எக்ஸ்டசி’ மாத்திரைகள் அடங்கும்.
திரவ வடிவில் ‘ஹெராயின்’, ‘எம்டிஎம்ஏ’, ‘கொக்கைன்’ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
“பிரபலமான தூதஞ்சல் விநியோக நிறுவனங்கள் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாக 22 வழக்குகள் பதிவாகியுள்ளன, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“அதேபோல் சில அனைத்துலக, உள்ளூர் தூதஞ்சல் விநியோக நிறுவனங்கள் மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளது. அதன் தொடர்பாகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் கும்பல்கள் பல்வேறு விநியோக நிறுவன தளங்களைப் பயன்படுத்துவது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.


