கோலாலம்பூர்: மலேசியாவில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் 790,614 சாலை விபத்துகள் நேர்ந்ததாகப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே, 273,668 விபத்துகள் பதிவானதாக அவர் தெரிவித்தார்.
கடந்த மூவாண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அவர் கூறினார்.
அதன்படி, 2023ஆம் ஆண்டில் 739,877ஆக இருந்த விபத்துகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 778,159ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு, அது மேலும் 790,614ஆக உயர்ந்தது. இது சராசரியாக ஆண்டுக்கு 3.39 விழுக்காட்டு அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் சொன்னார்.
“சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களில் பெரும்பாலானவை பயணிகள் கார்கள். ஒட்டுமொத்த விபத்துகளில் 60 விழுக்காடுமுதல் 70 விழுக்காடுவரை அவை சம்பந்தப்பட்டவை,” என்று வியாழக்கிழமை (ஜூலை 9) நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் அமைச்சர் லோக் தெரிவித்தார்.
அதே நேரத்தில், மோட்டார்சைக்கிள் விபத்துகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்குச் சராசரியாக 5.83 விழுக்காடு அதிகரிப்பதாக அவர் கூறினார்.
“பயணிகள் கார்களுடன் ஒப்பிடும்போது, மோட்டார்சைக்கிள் விபத்துகள் குறைவாக இருந்தாலும், ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் சாலை விபத்து மரணங்களில் 65 விழுக்காட்டுக்கும் அதிகமானவை மோட்டார்சைக்கிள் விபத்துகளால்தான் ஏற்படுகின்றன,” என்றும் திரு லோக் குறிப்பிட்டார்.
மிதிவண்டி விபத்துகள் ஆகக் குறைவாகப் பதிவாகியிருப்பதாகச் சொன்ன அவர், குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றார்.
ஆண்டுதோறும் பதிவாகும் மொத்த விபத்துகளில், 0.5 விழுக்காடுமுதல் 0.6 விழுக்காடுவரை மிதிவண்டிகள் சம்பந்தப்பட்டவை என்று திரு லோக் தெரிவித்தார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்துவதிலும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதிலும் அரசாங்கம் தொடர்ந்து கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

