தோக்கியோ: ஜப்பானில் சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர் ஓட்டும் வாடகைக் கார் விபத்துகள் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகரித்துள்ளன.
ஜப்பானின் போக்குவரத்துப் பாதுகாப்பு அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டில் 134ஆக இருந்த அந்த விபத்துகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டு 212 ஆகப் பதிவாகின.
வலப்புற ஓட்டுநர் இருக்கை கொண்ட வாகனங்களும் இடப்பக்கப் போக்குவரத்து விதிகளும் வெளிநாட்டவருக்குப் பழக்கமில்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
வெளிநாட்டவர் ஏற்படுத்திய விபத்துகளில் 24 விழுக்காடு வலப்பக்கம் திரும்பும்போது எதிர்த்திசைத் தடத்தில் தவறாக நுழைவதால் நடந்தன. சில விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதுதவிர, விதிகளை மீறி வாகனங்களை நிறுத்துவது, கைவிடுவது, பனிக்காலச் சக்கரங்களின்றி வாகனங்கள் சிக்கிக்கொள்வது போன்ற பிரச்சினைகளும் சுற்றுலாத் தலங்களில் எழுந்துள்ளன.
இதனைத் தடுக்க, ஜப்பானின் நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலாத்துறை அமைச்சு இவ்வாண்டு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
நியூ சிட்டோஸ், ஃபுக்குவோக்கா, நஹா ஆகிய மூன்று விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள சாலைகளில் வண்ணக் குறியீடுகளும் நெகிழித் தடுப்புக் கம்பங்களும் அமைக்கப்படவுள்ளன.
மேலும், வாடகைக் கார் நிறுவனங்கள் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட மொழிகளில் போக்குவரத்து விதிகள் குறித்த கையேடுகளை வழங்குகின்றன.
வெளிநாட்டவரின் வாடகைக் கார் பயன்பாட்டை ஆராய ஜப்பான் சுற்றுலாத்துறை அமைப்பும் இவ்வாண்டு கருத்தாய்வு ஒன்றை நடத்தவுள்ளது. இதன் முடிவுகள் விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
