அமெரிக்க வரிவிதிப்பில் அதிகரிப்பை ஏற்கமுடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

அமெரிக்க வரிவிதிப்பில் அதிகரிப்பை ஏற்கமுடியாது: ஐரோப்பிய ஒன்றியம்

2 mins read
f453ed84-182b-4cda-969b-33eb35f095b2
2019ஆம் ஆண்டில், சரக்கு ரயில்களில் ஏற்றப்பட்டுள்ள கொள்கலன்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பிரசல்ஸ்: சென்ற ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமெரிக்கா கடைப்பிடிக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

டோனல்ட் டிரம்ப் உலக அளவில் விதித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்து வந்துள்ளது.

வர்த்தகக் கொள்கையைப் பற்றி, 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சார்பில் பேசும் ஐரோப்பிய ஒன்றியம், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து வாஷிங்டன் முழுமையான விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கூறியது.

டிரம்ப்பின் உலகளாவிய வரிவிதிப்பை நீதிமன்றம் நிராகரித்ததும், அமெரிக்க அதிபர் தற்காலிக, அனைவருக்குமான 10 விழுக்காட்டு வரிவிதிப்பை அறிவித்தார். ஒரு நாளுக்குப் பின்னர், அதனை 15 விழுக்காட்டுக்கு உயர்த்தினார்.

“இரு தரப்பும் ஒப்புக்கொண்ட நியாயமான, சமநிலையான, பரஸ்பர நலனுக்கு ஏற்ற எல்லைதாண்டிய வர்த்தகத்தையும் முதலீட்டையும் வழங்குவதற்கு, தற்போதைய நிலைமை உகந்ததன்று,” என்று ஒன்றியம் கூறியது.

சென்ற ஆண்டின் வர்த்தக உடன்படிக்கையின்படி, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியப் பொருள்களுக்கு 15 விழுக்காட்டு வரி விதிக்கப்பட்டது.

அதோடு, உதிரிப் பாகங்கள் போன்ற சில பொருள்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. அதே வேளையில், பல அமெரிக்கப் பொருள்கள் மீதான இறக்குமதி வரிகளை நீக்க ஒன்றியமும் ஒப்புக்கொண்டது.

“குறிப்பாக, போட்டித்தன்மைமிக்க சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருள்கள், வரிகளில் அதிகரிப்பு இல்லாமல் தொடர்ந்து பலன்பெறவேண்டும்,” என்று ஒன்றியத்தின் நிர்வாகி கூறினார்.

ஊகிக்கமுடியாத வரிகள் இடையூறாக இருக்கும் என்றும் உலகச் சந்தைகள் முழுவதும் உள்ள நம்பிக்கையைக் கீழறுக்கும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்