ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் ஹூதிக் கிளர்ச்சிக் குழு தாக்குதல் நடத்தியதாலும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துத் தடை குறித்த அறிக்கைகளாலும் கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெயின் எதிர்கால விலை 79 காசுகள் அதிகரித்து ஒரு பீப்பாய் எண்ணெய் 92.77 டாலர் ஆனது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி போருக்கு முந்தைய அளவிற்குத் திரும்பியுள்ளதால் விநியோக உபரி ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன் காரணமாக, இவ்வாரம் பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.5 விழுக்காடு சரிவடையும் என்றும் டிசம்பர் மாதத்திற்கான டபிள்யூடிஐ ஒப்பந்தம் கிட்டத்தட்ட 6 விழுக்காடு வாராந்திரச் சரிவைச் சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.
பிரெண்ட், டபிள்யூடிஐ ஆகிய இரண்டும் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவைச் சந்திக்கவுள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளன.
“ரியாத்மீதான ஹூதி குழுவின் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு கச்சா எண்ணெய் விநியோகம் குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன. அது வாங்கும் போக்கைத் தூண்டியுள்ளது,” என்று ரகுடென் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் சரக்கு சந்தை ஆய்வாளர் சட்டோரு யோஷிடா கூறினார்.
“இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஓபெக் பிளஸ் கூட்டத்தில், ஒருங்கிணைந்த உற்பத்திக் குறைப்புகள் தொடரும் என்ற எதிர்பார்ப்புகளும் சந்தைக்கு ஆதரவளித்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக் குழு, ரியாத்மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது. அது, ஹூதிக்களுடனான போரில் சவூதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ள அண்மைய பின்னடைவு.
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதி வெடித்துச் சிதறியதாகவும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதாகவும் ஈரானின் காவற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள்மீதான ஈரானின் தீவிரமடைந்துவரும் தாக்குதல்கள் சந்தையில் குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் அபாயக் கூடுதல் விலையைத் தொடர்ந்து சேர்த்துவருவதாக யுஓபி குழும வாடிக்கையாளர் குறிப்பில் தெரிவித்தனர்.
