ஹாங்காங்: பருவநிலை மாற்றத்தால் இமயமலை வட்டாரத்தில் பனிப்பாறைகள், பாறைகளின் உறுதித்தன்மை குறைந்து வருவதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
நேப்பாளத்தின் ‘லாங்டாங் லிருங்’ மலையின் வடக்குப் பகுதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஏற்பட்ட ராட்சதப் பனி, பாறைச் சரிவு காரணமாக எல்ஹெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 165க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 800 வெளிநாட்டவர்கள் உட்பட 1,500 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கால் 6 நீர்மின் நிலையங்களும் சீனா-நேபாள எல்லையிலுள்ள கியிரோங் துறைமுகக் கட்டமைப்பும் பெரும் சேதமடைந்துள்ளன.
பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெப்பநிலை, பனி உருகுதல், உறைபனி மாற்றங்கள் ஆகியவை மலைச்சரிவுகளைப் பலவீனப்படுத்தி இத்தகையப் பேராபத்துகளை உருவாக்குவதாக நியூசிலாந்து புவி அறிவியல் ஆய்வாளர் சைமன் காக்ஸ் தெரிவித்தார்.
நிலநடுக்கமும் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுவதும் ஒன்றாகச் சேரும்போது இத்தகைய பேரழிவுகள் ஏற்படுவதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெஞ்சமின் ஹார்டன் குறிப்பிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளில் நேபாள மலைகளில் பனிப்பரப்பு மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பேராபத்துகளின் அறிகுறி: தலாய் லாமா
இதற்கிடையே, இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பௌத்த மதத்தலைவர் தலாய் லாமா ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் பருவநிலை மாற்றம் போன்ற பேராபத்துகளின் அறிகுறி என்று இந்தியாவில் வசிக்கும் 91 வயது தலாய் லாமா எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய தகுந்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
திபெத்திய நாடுகடந்த அரசாங்கத்தின் தலைவர் பென்பா செரிங்கும் இச்சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.


