பங்ளாதேஷில் அதிகரிக்கும் டெங்கி மரணங்கள், வல்லுநர்கள் எச்சரிக்கை

பங்ளாதேஷில் அதிகரிக்கும் டெங்கி மரணங்கள், வல்லுநர்கள் எச்சரிக்கை

படம்: ராய்ட்டர்ஸ்

31 Oct 2026 - 7:55 pm

2 mins read

டாக்கா: பங்ளாதேஷில் அக்டோபர் மாதம், மாத அடிப்படையில் 2026ன் ஆக அதிக டெங்கி மரணங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு டிசம்பருக்குமுன் டெங்கி நோய்ப்பரவல் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்நாட்டுச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்படி, அக்டோபர் 30ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டு டெங்கிக் காய்ச்சலால் 418 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 133,000க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

அக்டோபர் மாதத்தில் மட்டும் 173 பேர் உயிரிழந்தனர். ஒப்புநோக்க, செப்டம்பரில் 148 பேர் மாண்டனர். இவ்வேளையில், 1,200க்கும் மேற்பட்டோரைப் பலிகொண்ட உலகின் ஆக மோசமான தட்டம்மைத் தொற்றையும் பங்ளாதேஷ் எதிர்கொண்டு வருவதால், அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

பாதிப்பு தீவிரமடைந்த பிறகே நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். டாக்காவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் 67 புதிய நோயாளிகள் சேர்க்கப்பட்டனர் என்று மருத்துவமனை இயக்குநர் மிர்சா கோலம் சர்வார் கூறினார். நோயாளிகள் பலருக்கு ரத்த அழுத்தம், உயிர்வாயு அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

டெங்கிக் கிருமியின் நான்கு வகைகளும் பரவி வருவதால் தீவிரப் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவதும் தாமதமான சிகிச்சையுமே மரணங்களுக்கு முக்கியக் காரணங்கள் என்று மருத்துவ வல்லுநர் ஏபிஎம் அப்துல்லா தெரிவித்தார்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் அறிகுறிகள் தோன்றியவுடன் சிகிச்சை பெறவும் அவர் வலியுறுத்தினார்.

பங்ளாதேஷ் இதுவரை டெங்கித் தடுப்பூசியை அறிமுகப்படுத்தவில்லை. மழைப்பொழிவும் ஈரப்பதமும் மாறுபடுவதால் கொசுக்கள் உற்பத்தியாகும் காலம் நீடித்துள்ளதாகப் பூச்சியியல் வல்லுநர் கபிருல் பஷார் கூறினார். எனவே, நவம்பர் மாதம் முழுவதும் நோய்த்தொற்று நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்