லினான், சீனா: சீனாவின் கிழக்கு மாநிலமான சேஜியாங்கில் பெண்கள் மட்டும் சேர்ந்து வாழும் இல்லங்கள் பிரபலமாகிவருகின்றன.
பரஸ்பர ஆதரவைப் பெறவும் மனம்விட்டுப் பேசவும் அத்தகைய இல்லங்களில் தஞ்சமடையும் பெண்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்துவருகிறது.
பொருளியல் ரீதியாக வலிமையடைந்துவரும் பெண்கள், தங்களுக்கென உடற்பயிற்சிக் கூடம், தங்குவிடுதிகள், மதுக்கூடங்கள் ஆகியவற்றை அமைப்பதற்காகக் குரல் கொடுக்கின்றனர்.
கேகே இமேஜினேட்டிவ் ஸ்பேஸ் என்ற தங்கு விடுதியில் தங்குவோர் ஓர் இரவு 30 யுவென் ($5.36) செலுத்தினால் போதும். வேலையிடத்தில் ஆண்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அந்த விடுதியைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டார் சென் யானி.
ஆண்களிடத்திலிருந்து வந்த பலவகையான துன்புறுத்தலால் வழக்கம்போல வேலை செய்ய சிரமப்பட்டதாகக் கூறினார் 30 வயது சென்.
அதன் அடிப்படையில் ஷாங்காயிலிருந்து கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹங்சாவ் புறநகர் பகுதியில் தங்குவிடுதிகளை சென் கட்டினார்.
அந்த இடத்திற்குத் தொடக்கத்திலேயே 12 பெண்கள் வந்தனர். சிலர் சுற்றுலாவுக்காகவும் வேறு சில திருமணம் செய்யும்படி உற்றார் உறவினரின் வற்புறுத்துதலிலிருந்து தப்பிக்கவும் அங்கு வந்ததாகக் குறிப்பிட்டனர்.
பெண்களின் பொருளியல் சுதந்திரமும் கல்வி வாய்ப்புகளும் தனியாக வாழ அவர்களுக்கு வழியமைப்பதாக சென் கூறினார்.