நடப்புக்கு வந்தது இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்

நடப்புக்கு வந்தது இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்

2 mins read
982b1266-fa6d-49a2-a9e8-3f40673ce663
இரு நாடுகளின் சந்தைகளிலும் உள்ள சேவை நிறுவனங்களுக்கும் நிபுணர்களுக்குமான வாய்ப்புகளை ஒப்பந்தம் விரிவுபடுத்துகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட விரிவான வர்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (ஜூலை 15) நடப்புக்கு வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான பொருள்கள் மீதான தீர்வைகளை அது அகற்றுகிறது. இரு சந்தைகளிலும் உள்ள சேவை நிறுவனங்களுக்கும் நிபுணர்களுக்குமான வாய்ப்புகளை ஒப்பந்தம் விரிவுபடுத்துகிறது.

அது, இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளியல், வர்த்தக ஒப்பந்தம் என்று வழங்கப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பிரிட்டிஷ் வரி வரம்புகளில் பெரும்பாலானவற்றுக்கு உடனடியாக வரி இல்லாத அனுமதியை ஒப்பந்தம் வழங்குகிறது. இதன்மூலம் துணிமணி, தோல், காலணிகள், கடல்சார் பொருள்கள், ரத்தினக்கற்கள், ஆபரணங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் போன்ற அதிக உடலுழைப்புத் தேவைப்படும் துறைகள் பயனடையும்.

உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கியப் பொருளியல்களில் ஒன்றான இந்தியச் சந்தையில் பிரிட்டன் பரந்த அளவில் வாய்ப்புகளைப் பெறுகிறது. வாகனங்கள் போன்ற துறைகளுக்குப் படிப்படியான வரிக் குறைப்புகள், ஒதுக்கீடுகள் முதலியவையும் கொள்முதல், நிதிச் சேவைகள், கல்வி, காப்புறுதி, தொழில்முறைச் சேவைகளில் உள்ள வாய்ப்புகளும் அவற்றில் அடங்கும்.

வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம் முதலியவற்றுக்கான புதிய வழிகளை ஒப்பந்தம் திறந்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். இந்த வணிகங்களுக்கான வாய்ப்புகளை இது உருவாக்கும் என்றார் அவர்.

2025-26ஆம் ஆண்டில் இந்தியா பிரிட்டனுக்கு 13.44 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை ஏற்றுமதி செய்தது. அது இறக்குமதி செய்த பொருள்களின் மதிப்பு 11.68 பில்லியன் டாலர். அதேநேரத்தில் இருதரப்பு சேவைகளின் வர்த்தகம் 2024ல் மொத்தம் 35.44 பில்லியன் டாலராக இருந்தது, இதில் இந்தியா கிட்டத்தட்ட 7.9 பில்லியன் டாலர் உபரியைக் கொண்டிருந்தது. இந்திய வர்த்தக அமைச்சு அந்தத் தகவல்களை வெளியிட்டது.

பிரிட்டன், 97.7 விழுக்காடு வர்த்தக மதிப்பை உள்ளடக்கிய 96.8 விழுக்காட்டுச் சுங்க வரிப் பிரிவுகளின் மீதான வரிகளை உடனடியாக ரத்துச் செய்யும். இந்தியா, 64.1 விழுக்காட்டுச் சுங்க வரிப் பிரிவுகளின் மீதான வரிகளை நீக்கும். மேலும் 21 விழுக்காட்டுச் சுங்க வரிப் பிரிவுகள் மீதான வரிகளையும் அது படிப்படியாக அகற்றும்.

குறிப்புச் சொற்கள்