லண்டன்: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் பிரட்டிஷ் வர்த்தக, தொழில் அமைச்சர் ஜோனதன் ரெனோல்ட்சும் பங்கேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் அரசாங்கமும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) வெளியிட்டது.
“உலகிலேயே மூன்றாவது ஆகப் பெரிய பொருளியலாக இந்தியா கூடிய விரைவில் தடம் பதிக்க இருக்கிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது முக்கியம். இதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கமும் நானும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறோம்,” என்று திரு ரெனோல்ட்ஸ் தெரிவித்தார்.
இதற்தாகவே இந்தியாவுக்குத் தமது பேச்சுவார்த்தைக் குழுவுடன் பயணம் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பாகப் பிரிட்டன் கடப்பாடு கொண்டுள்ளது என்பதைக் காட்ட இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
உலகிலேயே ஆகப் பெரிய பொருளியல் பட்டியலில் தற்போது இந்தியா ஐந்தாவது இடத்திலும் பிரிட்டன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 41 பில்லியன் பவுண்டு (S$69 பில்லியன்) என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.