புதுடெல்லி: கம்போடியாவில் விஷ்ணு சிலை ஒன்று தகர்க்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் சர்ச்சைக்குரிய வட்டாரத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து அறிந்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தாய்லாந்து ராணுவம் அந்தச் சிலையைத் தகர்த்ததாகக் கூறப்படுகிறது.
சிலை தகர்க்கப்பட்ட சம்பவம் மிகவும் அவமரியாதையான செயல் என்றும் உலகெங்கும் உள்ள இந்து மதத்தினரின் உணர்வுகளை அது காயப்படுத்தியுள்ளதாகவும் கூறிய அமைச்சின் பேச்சாளர் இத்தகைய சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று என்றார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் இருதரப்புக்கு இடையிலான பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலமாகவும் அரசதந்திர முறையிலும் தீர்வுகாண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்தச் சிலையைத் தாய்லாந்து தகர்த்ததாகக் கம்போடிய அதிகாரி ஒருவர் சாடினார்.
‘பிரிய விகார்’ கோயிலின் பேச்சாளர் லிம் சன்பன்ஹா, அந்தச் சிலை கம்போடிய எல்லைக்குள் அன் செஸ் வட்டாரத்தில் அமைந்திருந்ததாகக் கூறினார். 2014ல் கட்டப்பட்ட அச்சிலை, கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 22) தகர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிலை தகர்க்கப்பட்ட சம்பவத்தின் காணொளி இணையத்தில் பரவியது.
தொடர்புடைய செய்திகள்
அந்தக் காணொளி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டதன்று எனக் கருதப்படுவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
‘பிரிய விகார்’ கோயிலில் பௌத்த, இந்து சமயத்தினர் வழிபாடு செய்வது வழக்கம் என்று கம்போடியா குறிப்பிட்டது.
இவ்வேளையில், தனது ராணுவம் இந்து தெய்வச் சிலையைத் தகர்த்ததைத் தாய்லாந்து அரசாங்கம் வியாழக்கிழமை (டிசம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில் தற்காத்துப் பேசியுள்ளது.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கட்டுப்பாட்டை நிலைப்படுத்த அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அது கூறியது.
பாதுகாப்புக் காரணங்கள், வட்டார நிர்வாகம் ஆகியவை தொடர்பில் அந்த நடவடிக்கை இடம்பெற்றதாகக் கூறிய தாய்லாந்து அரசாங்கம், எந்தச் சமயத்தையோ நம்பிக்கையையோ புண்படுத்துவது நோக்கமன்று எனக் குறிப்பிட்டது.
அந்தச் சிலை எந்தச் சமயத்துடனும் தொடர்பில்லாதது என்றும் தாய்லாந்து-கம்போடியா எல்லையில் அமைந்திருந்த அது ஓர் அலங்காரப் பொருள் என்றும் அது வாதிட்டது.

