பேரிடர்களில் தப்பிக்க இந்தியா, சீனாவுடன் கூட்டு முயற்சி: நேப்பாளம் விருப்பம்

பேரிடர்களில் தப்பிக்க இந்தியா, சீனாவுடன் கூட்டு முயற்சி: நேப்பாளம் விருப்பம்

படம்: ராய்ட்டர்ஸ்

25 Sep 2026 - 5:54 pm

2 mins read

காத்மாண்டு: இந்தியா மற்றும் சீனாவுடன் இணைந்து இமயமலைக்கான பருவநிலை மீள்திறன் வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று நேப்பாளப் பிரதமர் பாலேந்திர ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81வது அமர்வில் ஆற்றிய தனது முதல் உரையில் நேப்பாளப் பிரதமர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

அண்மையில் இமயமலை வட்டாரத்தில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

நேப்பாளம், இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே தரவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கூட்டமைப்பை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் மத்தியில் பேசிய ஷா, இமயமலையின் உணர்திறன் மிக்க சூழலியலை வெப்பமான பருவநிலை சீர்குலைத்து வருவதாகக் கூறினார்.

2015ஆம் ஆண்டுக்குப் பிந்திய நேப்பாள அரசாங்கங்கள் இந்தியா மற்றும் சீனா இடையே புவிசார் அரசியல் சமநிலையை அடைவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப அவரது இந்த உரை அமைந்திருந்தது.

இரு பெரும் பொருளியல் நாடுகளுக்கு இடையே நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாக இருக்கும் நேப்பாளம், தனது இரு அண்டை நாடுகளின் செல்வாக்கையும் சமநிலைப்படுத்துவதன் மூலம் தனது உத்திபூர்வ சுயாட்சியைப் பாதுகாக்க நீண்டகாலமாக முயன்று வருகிறது.

இந்நிலையில் ஐநா பொதுச்சபையில் பேசிய ஷா, “இந்து குஷ் இமயமலை வட்டாரத்தில் இரண்டு பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். அங்குள்ள மலைத்தொடர்கள் நேப்பாளத்திற்கு அப்பாற்பட்ட பல பகுதி மக்களுக்கு நீர், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன. பூமியின் விளிம்புப் பகுதி அல்ல இமயமலை; அது பூமியின் உயிர்காக்கும் அமைப்பின் ஒரு முக்கிய அங்கம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதனால்தான், உடனடி முதல் முயற்சியாக, நேப்பாளம், இந்தியா மற்றும் சீனா தலைமையிலான புதிய வழிமுறையை உருவாக்க வேண்டும் என குரல் கொடுக்கிறோம்,” என்றார்.

ஆபத்தான பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிக்க, செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள புதிய வழிமுறை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்