தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கும் இந்தியா, சீனா

2 mins read
c46ad4cd-7ed1-40e8-aef8-70f960fafa02
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனாவும் இந்தியாவும் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளன. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கான அதிகாரத்துவப் பயணத்தை முடித்துக்கொண்டதை அடுத்து இருநாட்டு அரசாங்க ஊடகங்களும் அந்தத் தகவலைப் புதன்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்டன.

திரு வாங் யியின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி குறித்து பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல சீனாவும் இந்தியாவும் இணக்கம் தெரிவித்தன.

மேலும், சுற்றுலா விசாக்களை வழங்கி வர்த்தகத்தைப் பெருக்க இருநாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

எல்லை விவகாரம் தொடர்பில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதில் எல்லை வரையறை பற்றிய கலந்துரையாடலில் முன்னேற்றம் காண இருதரப்பும் இணங்கியதோடு மூன்று எல்லை வர்த்தகச் சந்தைகளை மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.

2020ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லைப் பூசலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு கசந்தது.

இருப்பினும், கடந்த அக்டோபர் மாதம் ர‌ஷ்யாவில் நடைபெற்ற உச்சநிலைச் சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாண்டுகளில் முதன்முறையாக சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்ததை அடுத்து இருநாட்டுப் பூசல் தணியத் தொடங்கியது.

திரு மோடி 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இம்மாதம் சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அடுத்ததாக இந்தியாவின் பரம எதிரியும் சீனாவின் நெருங்கிய பங்காளி நாடுமான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

திரு வாங் யி இம்மாதம் 22ஆம் தேதி வரை பாகிஸ்தானில் இருப்பார். அங்கு ஆறாவது முறையாக நடைபெறும் சீனா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுக்கான உத்திபூர்வ கலந்துரையாடலில் அவர் பாகிஸ்தானின் மூத்த அமைச்சர் இ‌‌‌ஷாக் தாரைச் சந்திப்பார்.

குறிப்புச் சொற்கள்