கனடாவின் வெளியுறவுக் கொள்கை மாற்ற வரிசையில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது

கனடாவின் வெளியுறவுக் கொள்கை மாற்ற வரிசையில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது

2 mins read
a4e2f023-9bd1-4219-80a6-bcad741a9f47
தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்த இந்தியா மற்றும் கனடா கூட்டு பணித்திட்டம் ஒன்றுக்கு இணங்கியுள்ளன. - படங்கள்: நியூயார்க் டைம்ஸ், இபிஏ

புதுடெல்லி: சீனாவுடனான உறவுகளைச் சீரமைத்த பிறகு, மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் வட்டார அடிப்படையில் முக்கிய சக்திகளாக இருக்கும் நாடுகளுடன் ஈடுபாட்டை வலுப்படுத்த கனடா முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆசியாவின் மற்றொரு பெரிய நாடான இந்தியா மீது தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலைப் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கனடா வரவேற்ற சில வாரங்களிலேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

அந்தப் பயணத்தின்போது, தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்த இந்தியா மற்றும் கனடா கூட்டு பணித் திட்டம் ஒன்றுக்கு இணங்கின.

இது காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் போன்ற விவகாரங்களை முறையான பாதுகாப்பு வழித்தடங்கள் மூலம் கையாள்வதில் இரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான ஆர்வத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ஒற்றைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த உறவையும் பாதிக்காமல் தடுக்க முடியும்.

“போதைப்பொருள் கடத்தல், குறிப்பாக ஃபெண்டானில் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் மற்றும் எல்லை தாண்டிய சட்டவிரோத கும்பல்கள் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் இரு தரப்பும் ஒத்துழைக்கும்” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு வான்கூவர் அருகே கனடிய சீக்கியப் பிரிவினைவாதி கொல்லப்பட்டதில் புதுடெல்லிக்குத் தொடர்பிருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து, இருதரப்பு உறவுகள் கசப்படைந்தன.

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றது முதல், பிரதமர் கார்னி உறவுகளைச் சீர்செய்யும் கொள்கையைப் பின்பற்றி வருகிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமையில் வர்த்தகப் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை நம்பியிருக்கும் நிலையை குறைக்க கனடா உள்ளிட்ட நடுத்தர வளம் கொண்ட நாடுகள் தங்களுக்குள் உறவுகளை வலுப்படுத்தவும் சீனாவுடனான உறவை மறுசீரமைக்கவும் முயன்று வரும் வேளையில் இந்த மாற்றம் நிகழ்கிறது.

குறிப்புச் சொற்கள்