இந்திய விசா: மலேசியர்களுக்கு நற்செய்தி!

இந்திய விசா: மலேசியர்களுக்கு நற்செய்தி!

1 mins read
4c32d816-4845-400f-bc0b-0f25bd635d4a
வழங்கப்பட்ட 120 நாள்களுக்குள் அந்த மின்னிலக்கச் சுற்றுப்பயண விசாவைப் பயன்படுத்த வேண்டும். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

பெட்டாலிங் ஜெயா: இந்தியா செல்ல விரும்பும் மலேசியர்கள் 30 நாள்களுக்குள் அந்நாட்டிற்கு இருமுறை சென்று வருவதற்கான இ-விசாவை இலவசமாகப் பெறலாம்.

இவ்வாண்டு ஜூலை 1ஆம் தேதி அறிமுகம் காணும் இந்நடைமுறை, 2025 ஜூன் 30 வரை நடப்பிலிருக்கும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளதாக ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ‘இரட்டை நுழைவு இ-விசா’ பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்திய விசா இணையவாயில் வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓர் அறிக்கை வாயிலாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வழங்கப்பட்ட 120 நாள்களுக்குள் அந்த மின்னிலக்கச் சுற்றுப்பயண விசாவைப் பயன்படுத்த வேண்டும்.

அத்துடன், மின்னிலக்கச் சுற்றுப்பயண விசா மற்றும் பிறவகை விசாக்கள் தொடர்பில் நடப்பிலுள்ள விதிமுறைகள் தொடரும் என்றும் இந்தியத் தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விசா சேவை வழங்குநர்கள் மூலமாக அல்லது தூதரகத்திலிருந்து நேரடியாக வழக்கமான தாள் விசா பெற விரும்புவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வழக்கமான மின்னிலக்கச் சுற்றுப்பயண விசா பெறுவதற்கான கட்டணம் கிட்டத்தட்ட 465 ரிங்கிட்டாக இருந்து வந்தது. அதனை இணையம் வழியாகச் செலுத்த வேண்டும்.

இந்தியர்களும் விசா இல்லாமல் மலேசியா செல்லவும் அங்கு 30 நாள்கள்வரை தங்கியிருக்கவும் முடியும். கடந்த 2023 டிசம்பர் 1ஆம் தேதி நடப்பிற்கு வந்த இவ்விதிமுறை, இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை செயல்பாட்டில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்